திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தமும், அதிமுக கூட்டணியில் உள்ள எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளரான முகமது முபாரக்கும் போட்டியிடுகின்றனர். அதுபோல் பிஜேபி கூட்டணி சார்பில் பா.ம.க. வேட்பாளர் திலகபாமாவும் போட்டியிடுகின்றனர். இப்படி திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் மும்முனை போட்டி மூலம் தேர்தல் களமும் சூடுபிடித்து வருகிறது.
வேட்பாளர்களும் மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தான் திண்டுக்கல் மாநகராட்சி பகுதியான வேடபட்டி பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் தனது ஆதரவாளர்களுடன் திறந்த ஜீப்பில் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்துக் கொண்டு வந்தனர்.
அப்போது திடீரென எதிரே எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளரான முகமது முபாரக்குடன் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும் தனது ஆதரவாளர்களுடன் இரட்டை இலைக்கு வாக்கு கேட்டு வந்து கொண்டிருந்தார். இப்படி இரண்டு வேட்பாளர்களும் தனது ஆதரவாளர்களுடன் எதிரெதிரே சந்தித்துக் கொண்டனர். அப்போது இரண்டு வேட்பாளர்களும் ஒருவரை ஒருவர் மாறி மாறி கைகூப்பி வணங்கிக் கொண்டனர்.
அப்போது உடன் இருந்த சீனிவாசனோ, சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தத்தை பார்த்து ‘நல்வாழ்த்துக்கள் சச்சிதானந்தம் நமக்குள் சண்டை வேண்டாம் நாம் ஒதுங்கி சென்று விடுவோம் மக்களிடம் ஆதரவு கேட்போம் யாருக்கு ஆதரவு அளிக்கிறார்களோ அதை நாம் ஏற்றுக் கொள்வோம் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு...’ என்று நகைச்சுவையாக பேசினார். அதைக் கண்டு கூட்டத்தில் இருந்த இரண்டு கட்சி ஆதரவாளர்களுமே சிரித்து விட்டனர். அதைத் தொடர்ந்து இரண்டு வேட்பாளர்களும் தனது ஆதரவாளர்களுடன் ஒதுங்கிச் சென்றனர்.