முதல்வர் மு.க.ஸ்டாலினை இந்தியாவே எதிர்பார்த்து காத்திருக்கிறது என பீகார் மாநிலத்தின் துணை முதலமைச்சரும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70 ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை நந்தனம் மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு தேசிய அளவில் பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள சென்னை வந்துள்ளனர்.
இந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசிய பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், “இன்று சிறப்பான நாள். முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இன்று பிறந்த நாள். அதேபோல் பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கும் இன்று தான் பிறந்த நாள். என் தந்தை லாலு பிரசாத் யாதவும் அவரது வாழ்த்துகளை தெரிவிக்க சொன்னார். கடுமையான உழைப்பினால் ஆட்சியை பிடித்தவர். சமூக நீதிகளின் மேன்மைகளை பாதுகாக்கும் வகையில் பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியை நடத்தி வருகிறார்.
சோசலிஷம் மற்றும் சமூகநீதி கொள்கைகளைக் கொண்ட கட்சிகள் சந்திக்கும் தளமாக தமிழ்நாடு மாறிவிட்டது. சமூகநீதியில் உறுதியுடன் இருந்தால் மட்டுமே வலுவான தலைமை உருவாகும். தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் கொள்கைகளை தேசிய அளவில் எதிர்க்கட்சிகளாக உள்ள கட்சிகள் கற்றுக்கொள்ள வேண்டும். நாட்டின் ஜனநாயகமே அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது. நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை அமலில் உள்ளது. வலுவான ஒரு மாற்று சக்தியை உருவாக்குவதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினை இந்தியாவே எதிர்பார்த்து காத்திருக்கிறது.” எனக் கூறினார்.