இந்தியா மட்டுமல்ல உலகமே எதிர்பார்க்கப்பட்ட மக்களவைத் தேர்தலின் முடிவுகள் நேற்று (04.06.2024) வெளியானது. அதில், மொத்தம் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க வெறும் 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தாலும், கூட்டணிக் கட்சிகள் தயவால் பா.ஜ.க கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிப்பதற்கான சூழல் நிலவுகிறது.
இந்நிலையில் டெல்லியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் மத்தியில் ஆட்சி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து முக்கியமான ஆலோசனைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், தேஜஸ்வி யாதவ், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சோனியாகாந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
மேலும் இந்தக் கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் அபிஷேக் பானர்ஜி, ஆம் ஆத்மி சார்பில் சஞ்சய் சிங், ஜார்கண்ட் முதல்வரும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தலைவருமான சம்பாய் சோரன், ஜேஎம்எம் எம்எல்ஏவும், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவியுமான கல்பனா சோரன், ஆம் ஆத்மி எம்பி ராகவ் சதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய (என்சிபி - எஸ்சிபி) தலைவர்கள் சரத் பவார் மற்றும் சுப்ரியா சுலே, சிவசேனா (யூபிடி) தலைவர் சஞ்சய் ராவத் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.