எதிர்பார்ப்பை நோக்கி காத்திருப்பவர்கள் அது நிறைவேறாமல் போகுமானால், ஆத்திரத்தில் கட்சி மாறும் சீசன் இந்தத் தேர்தலில் அதிவேகமாக பரவலாகியிருக்கிறது. அதற்குப் தொடக்கப் புள்ளிவைத்தவர் சாத்தூர் சட்டமன்றத்தின் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான ராஜவர்மன். இவருக்கும் விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. அமைச்சருமான ராஜேந்திர பாலாஜிக்கும் ஏழரைப் பொருத்தம். அந்த அழுத்தம் காரணமாகவே அ.தி.மு.க’வின் தலைமை இந்தத் தேர்தலில் ராஜாவர்மனுக்குச் சீட் கொடுக்காமல் புறக்கணித்தது. அந்த வேகத்தில் ராஜவர்மன் டி.டி.வி.யின், அ.ம.மு.க. அணிக்குப் பறந்தவர். பின்னர் இரண்டே மணி நேரத்தில் அ.ம.மு.க.வின் சாத்தூர் தொகுதி வேட்பாளராகி விட்டார்.
அதே போன்று தூத்துக்குடி மாவட்டத்தின் அ.தி.மு.க. சீனியர் புள்ளி வடமலைப் பாண்டியன், கட்சி தொடர்பான பணிகளில் தீவிரமானவர். “ஜெ” இருந்த போது வடமலைப் பாண்டியனுக்கு தொகுதி பொறுப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளைக் கொடுத்திருக்கிறார். ஏரியாவில் அறியப்பட்ட புள்ளி வடமலைப் பாண்டியன். நடப்பு தேர்தலில் தொகுதியைப்பெற கட்சியின் மேல்மட்டம் வரை மூவ் செய்திருக்கிறார். ஆனால் அண்மையில் கட்சிக்கு வந்த ராதாகிருஷ்ணனை மா.செ சண்முகநாதன் தன் சிபாரிசின் மூலம் திருச்செந்தூர் தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளராக்கிவிட்டார். இதனால் வடமலைப் பாண்டியனும் அவர் சார்ந்த நகர கட்சியினரும் அதிருப்தி அடைந்தனர். மா.செ. மற்றும் கட்சியின் செயல்பாடுகளால் விரக்தியடைந்த வடமலைப் பாண்டியனும், அவர் தரப்பினர், அ.ம.மு.க.வுக்குத் தாவினர். தற்போது திருச்செந்தூரின் அ.ம.மு.க. வேட்பாளராகிவிட்டார் வடமலைப் பாண்டியன்.
அடுத்து தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலின் அய்யாத்துரைப்பாண்டியன் தி.மு.க.வின் மாநில வர்த்தக அணி துணைத் தலைவர் பொறுப்பிலிருந்தவர். கடையநல்லூர் மற்றும் தென்காசி ஆகிய தொகுதிகளில் ஒன்றில் வேட்பாளர் சீட்டிற்காக விருப்ப மனு கொடுத்தவர். அந்தத் தொகுதிகளைக் கருத்தில் கொண்டே கரோனா காலத்தில் மக்களுக்கான நிவாரணப் பணிகளை தன் சொந்தச் செலவில் மேற்கொண்டவர். ஆனால் சந்தர்ப்ப சூழல் தென்காசியும், கடையநல்லூரும் தி.மு.க. தன் கூட்டணியான காங்கிரசுக்கும், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்கிற்கும் ஒதுக்கியதால் அய்யாத்துரைப் பாண்டியனின் எதிர்பார்ப்புகள் ஈடேறாமல் போய்விட்டது. விரக்தியில், அ.ம.மு.க. கட்சிக்குத் தாவ, தற்போது அக்கட்சியின் சார்பில் கடையநல்லூர் வேட்பாளராகிவிட்டார் அய்யாத்துரைப் பாண்டியன்.
அ.ம.மு.க.விற்கு மாறிய வடமலைப் பாண்டியனைத் தொடர்பு கொண்டதில், அவரோ, “நான் 2,000லிருந்து அ.தி.மு.க.விலிருக்கிறேன். அப்போது மா.செ.வான சண்முகநாதன் கட்சிப் பொறுப்புத் தருவதாக என்னிடம் பேசினார், முடியவில்லை. ஆனா அம்மா தான் எனக்குப் பகுதிச் செயலாளர், தொகுதி பொறுப்பாளர் பொறுப்புகளை கொடுத்தார். என் மீது எந்த ஒரு குற்றச்சாட்டும் கிடையாது. ஆனா கட்சிக்கு வந்த ஒரு சில மாதங்களே ஆனவருக்கெல்லாம் வேட்பாளர் சீட், இதற்கு மா.செ.வின் சிபாரிசு. கட்சித் தலைமையும் வேட்பாளர் தேர்வில் விருப்பமனு கொடுத்தவர்களின் கட்சிப் பணிகள் பிற செயல்பாடுகளைப் பற்றி கவனத்தில் கொண்டதாகவே தெரியவில்லையே என்றார்” உரத்த குரலில். வெறுப்பில் விரக்தியில் கட்சி மாறும் போக்கு ஆரம்பமாகத் தான் தெரிந்தாலும்,போகப் போக அது விரிவடைகிற சூழலையே உணர்த்துகிறது தேர்தல் களம்.