தமிழகத்தில் 66 இடங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு வெளியிட்டு இருக்கும் அறிவிப்பாணைக்கு எதிராக விவசாயிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
தமிழக அரசு சார்பில் நேற்று, 'நிலக்கரி சுரங்கம் அமைக்கும் நிலத்தை லீசுக்கு எடுப்பதற்கான அனுமதியை மாநில அரசு கொடுத்தால் மட்டுமே உள்ளே சென்று சுரங்கம் தோண்டும் பணிகளைச் செய்ய முடியும் எனவே விவசாயிகள் யாரும் கவலை அடைய வேண்டாம்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து செய்தியாளர்களைச் சந்தித்து தங்களது கருத்துக்களைத் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை நிகழ்ந்து வரும் நிலையில் பேரவையிலும் இது குறித்து விவாதம் நடத்த திமுக எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீதான விவாதம் பேரவையில் நடைபெற்றது. அதில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் காமராஜ், அதேபோல் தமிழக வாழ்வுரிமைக் கட்சியை சேர்ந்த வேல்முருகன், காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை, மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்த ஜவாஹிருல்லா, கொங்குநாடு தேசிய கட்சி ஈஸ்வரன் உள்ளிட்ட பல உறுப்பினர்கள் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினர்.
கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய தமிழக முதல்வர், ''நீங்கள் எல்லோரும் எப்படி அதிர்ச்சிக்கு ஆளானீர்களோ அதுபோல் நானும்தான் அதிர்ச்சிக்கு ஆளானேன். செய்தியைப் பார்த்தவுடன் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்புகொண்டு பேசி, அதற்கு பிறகு பிரதமருக்கு கடிதம் எழுதினேன். அந்த கடிதத்தின் நகலை நாடாளுமன்ற கூட்டம் நடந்து கொண்டிருக்கக் கூடிய காரணத்தால் திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலுவுக்கு ஒரு பிரதி அனுப்பி உடனடியாக சம்பந்தப்பட்ட அமைச்சரை சந்தித்து நம்முடைய எதிர்ப்பையும், நான் பிரதமருக்கு எழுதிய கடிதத்தையும் தர வேண்டும் என உத்தரவிட்டேன்.
அவரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டார். தொழில்துறை அமைச்சர் சொன்னதுபோல் சம்பந்தப்பட்ட அமைச்சர் வெளியூரில் இருக்கின்ற காரணத்தால் நேரடியாகச் சந்திக்க முடிவில்லை. இதனால் டி.ஆர்.பாலு தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். பேசிய பொழுது தமிழக முதல்வர் அனுப்பி இருக்கும் கடிதத்திற்கு நிச்சயமாக நாங்கள் மதிப்பு கொடுப்போம் கவலைப்பட வேண்டாம் என்று உத்தரவாதத்தை ஒன்றிய அமைச்சர் சொன்னதாக டி.ஆர்.பாலு சொல்லியிருக்கிறார். ஆகவே நிச்சயமாக சொல்கிறேன் முதலமைச்சராக மட்டுமல்ல நானும் டெல்டாகாரன் தான். எனவே இதில் நான் உறுதியாக இருப்பேன். நீங்கள் எல்லோரும் எப்படி உறுதியாக இருக்கிறீர்களோ அதைவிட அதிகமாக உறுதியாக இருப்பேன்.” என்றார்.