உள்ளாட்சித் தேர்தலில் திமுகவின் வியூகம் எப்படி இருக்கிறது என்று அரசியல் வட்டாரங்களில் விசாரித்த போது, மிகவும் கவனமாக தேர்தல் களத்தில் காலெடுத்து வைக்க வேண்டும் என்று தி.மு.க. தலைமை நினைக்கிறது. வழக்கமாக சட்டமன்றத் தேர்தல் முடிந்து இரண்டு மூன்று மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடப்பது தான் வழக்கம். ஆனால் சட்டமன்றத் தேர்தல் வர இன்னும் ஒன்றரை ஆண்டுகாலம் இருக்கும் நிலையில், உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயத்தில் எடப்பாடி அரசு இருப்பதால், அதிக கவனம் தேவை என்று தி.மு.க. தலைமை கருதுவதாக சொல்லபடுகிறது. உள்ளாட்சித் தேர்தலில் பெருவாரியான வெற்றியைக் குவிப்பது, சட்ட மன்றத் தேர்தலை எதிர்கொள்ள உதவும் என்று ஸ்டாலின் நினைப்பதாக கூறுகின்றனர்.
இதில் அ.தி.மு.க.வினரிடம் உள்ளாட்சிக் களத்தில் வெற்றியைப் பறிகொடுக்க நேர்ந்தால், அடுத்து சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடித்தாலும், நிர்வாகச் சிக்கல் தான் ஏற்படும் என்பதை தி.மு.க. நன்றாகவே உணர்ந்துள்ளது. அதே சமயம் கட்சிப் பிரமுகர்கள் பலரும் சட்டமன்றத் தேர்தலில் காட்டும் வேகத்தை இடைத் தேர்தல் வரும் போதும் உள்ளாட்சித் தேர்தல் வரும் போதும் காட்டுவதில்லை என்ற ஆதங்கமும் தி.மு.க. தலைமைக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது. அதே போல் தி.மு.க. பிரமுகர்கள் பலரும் லோக்கலில் ஆளும் கட்சியினரோடு டை அப் செய்து கொண்டு டெண்டர், கட்டிங் என்று காரியம் சாதிப்பதையும் தி.மு.க. தலைமை கவனித்து கொண்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.
உதாரணமாக மாஜி மந்திரி பொன்முடி, லோக்கல் மந்திரி சி.வி.சண்முகத்தோடு நட்பு பாராட்டியதால், அவர் மகன் கௌதம சிகாமணி கள்ளக்குறிச்சி மக்களைவைத் தேர்தலில் வெற்றிபெற்றார். அதேபோல் கடந்த சட்டமன்றத் தேர்தலில் சி.வி.சண்முகம் விழுப்புரத்தில் நின்றபோது, அவருக்கு வசதியாக அங்கிருந்து விலகி பொன்முடி திருக்கோவிலூர் தொகுதியில் களமிறங்கி வெற்றிபெற்றார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பொன்முடியின் வேட்பாளரை வீழ்த்தினார் அதிமுக அமைச்சர் சண்முகம். இதேபோல்தான் கே.கே.எஸ்.எஸ்.ஆர், சாத்தூருக்கு இடைத்தேர்தல் வந்தபோது பெருசாக கவனம் செலுத்தவில்லை என்று கூறுகின்றனர். அதனால் அங்கே அ.தி.மு.க. வெற்றிபெற்றது. இரு கழகங்களுக்குள்ளும் உட்கட்சியினர் அரசியல் தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.