Skip to main content

மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டால் அது அறவழி போராட்டமாக இருக்காது - வைகோ ஆவேசம்

Published on 30/04/2018 | Edited on 30/04/2018
vaiko sp

 

கடந்த 17ம் தேியன்று நச்சு ஆலையான ஸ்டெர்லைட்டை மூடுகிற வரை ஒயமாட்டேன். மக்களின் உயிர் மூச்சுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஸ்டெர்லைட்டை அப்புறப்படுத்த வேண்டும் என்று வைகோ தூத்துக்குடி மாவட்டம் முழுவதிலும் உள்ள நகரங்களுக்கு வாகன பரப்புரையை மேற்கொண்டு மக்களைத் திரட்டி வருகிறார். அவரது பரப்புரையை பா.ஜ.க.வினர் வெளிப்படையாகவே எதிர்த்தனர். கடந்த 22ம் தேதியன்று வைகோவின் வாகன பரப்புரை  முடிந்து 28 அன்றுத் தூத்துக்குடியின் வி.வி.டி சிக்னல் அருகே பொதுக்கூட்டம். அதில் பேசிய வைகோவின் பேச்சில் அனல் தெறித்தது.

 

திரளாகத் திரண்ட கூட்டத்தில் வைகோவின் உரைவீச்சு :

உயிர்க் கொல்லி ஆலையான ஸ்ர்டெர்லைட்டை மூட வேண்டும் என்பது என்னுடைய  வாழ்க்கையின் லட்சியம். அந்த ஆலை ஆரம்பத்தில் மகாராஷ்ட்ராவில் தொடங்கப்பட்ட போது அந்த மக்கள் ஒன்று திரண்டு வந்து அடித்து உடைத்தார்கள்.  அப்போதைய மாநில முதல்வர் சரத்பவார், அந்த மக்களை ஒன்றும் செய்யக்கூடாது என்று போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பிறகே ஆலையின் உரிமத்தை ரத்து செய்து உத்தரவிட்டார் சரத்பவார் அவர் தான் முதல்வர். பின்னர் குஜராத்திற்குப் போன ஸ்டெர்லைட்டிற்கு அங்கே லைசென்ஸ் வழங்க மறுத்து விட்டார்கள். அங்கே இங்கே சுற்றி தமிழகத்திற்கு வந்த ஸ்டெர்லைட்டிற்குப் பத்தே நாட்களில் லைசென்ஸ் வழங்கிவிட்டார். முதல்வர் ஜெயலலிதா ஆலையைத் துவங்குவதற்கான அத்தனை விதிகளையும் காலில் போட்டு மிதித்து விட்டனர்.

 

vaiko sp

 

ஸ்டெர்லைட்டை மூட வலியுறுத்தி நான் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தேன். அப்போது உளவுத்துறை வைகோவின் வழக்கு காரணமாக ஸ்டெர்லைட் மூடப்பட உத்தரவிடலாம் என்று ஜெயலலிதாவிடம் சொன்னது. ஆனால் ஜெ மிகுந்த புத்திசாலி. ஆலை மூடப்பட்டால் வைகோவுக்கும், ம.தி.மு.க.வுக்கும் பெயர் வந்து விடுமே என்று மார்ச் 30 அன்று நாங்கள் ஸ்டெர்லைட்டிற்கான கரண்ட், தண்ணீர் கனெக்ஷ்னை கட் பண்ணி விட்டோம். என்று அறிவித்தார். இதை உச்ச நீதிமன்ற நீதிபதிகளிடம் தெரிவித்தனர். தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்கள். ஆனால் ஏப் 02 அன்று, ஸ்டெர்லைட் ஆலையின் உற்பத்தி நாட்டுக்கு அவசியம். அதை நடத்தலாம். ஆனால் அவர்கள் நூறு கோடி டெபாசிட் செய்ய வேண்டும். பின்னாளில் இந்த ஆலை சுற்றுபுறச்சூழலுக்குத் தடையாக இருந்தால் இந்தத் தீர்ப்பு அதற்குத் தடையாக இருக்காது என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தது என்னை அதிர வைத்து விட்டது என் நம்பிக்கை போய்விட்டது. அப்போது கூட  நான் ஆலைக்கெதிரான மக்களின் உணர்வுகளை ஒப்பன் கோர்ட்டில் வெளிப்படுத்தினேன்.

 

இப்போது ஆலை விரிவாக்கம் செய்யப்படுவதை எதிர்த்து பொது மக்கள் போராடத் தொடங்கி விட்டார்கள். கொந்தாளிப்பான சூழல் ஏற்பட்டுள்ளது இளைஞர்கள், வணிகர்கள் என்று மக்கள் எந்தவிதமான அரசியல் பின்னணியுமில்லாமல் போராடி வருகிறார்ககள். அதன் காரணமாகத்தான் ஆலையைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறார்கள். இந்த அரசின் துணையுடன் ஆலையை மீண்டும் திறக்க நிர்வாகம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. எனவேதான் நான் மீண்டும் நீதிமன்றத்தை நாடியுள்ளேன். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வரை நான் ஒயமாட்டேன். இளைஞர்கள் படை என் தலைமையில் திரளும் மீண்டும் ஆலை திறக்கப்பட்டால் அது அறவழி போராட்டமாக இருக்காது என்று அழுத்தம் கொடுத்துப் பேசினார் வைகோ.

சார்ந்த செய்திகள்