இரண்டு வருடத்துக்கு முன்பே, புதுக் கட்சியைத் தொடங்கப் போகிறேன் என்று அறிவித்த ரஜினி, தொடர்ந்து புதுசு புதுசாக படங்களில் நடித்து கொண்டே இருக்கிறார். ’கமலின் கலைப் பயணம் 60’ விழாவில் இருந்தே கமலும் ரஜினியும் ஒன்றாக சேர்ந்து அரசியலைக் கலக்கப் போகிறார்கள் என்று விறுவிறு செய்திகள் வெளி வந்தது, அதோடு ரஜினியும் கமலுமே நாங்கள் இணைந்து அரசியல் செய்வோம் என்று கூறி, எதிர்பார்ப்பின் அளவை அதிகமாக்கியுள்ளார்கள். சமீபத்தில்,’"கைதி'’ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜை அழைத்து ரஜினி பாராட்டியிருந்தார். பின்பு இருவரும் சேர்ந்து படம் பண்ணப்போறதாகவும், அதை தயாரிக்கப்போறது கமலின் ராஜ்கமல் பட நிறுவனம் என்றும் தகவல்கள் பரவியது. இந்தப் படத்தில் ரஜினியுடன் கமலும் நடிப்பாரா? இருவரின் அரசியல் கூட்டணிக்கான ட்ரைலரா இந்தப் படம் இருக்குமா என்ற அளவுக்கு பேச ஆரம்பித்துவிட்டனர். ரஜினியின் நண்பர்கள் தரப்போ, சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே கட்சியைத் தொடங்கிடுவார் என்று அழுத்தம் திருத்தமாக சொல்கின்றனர்.

மேலும் ரஜினி, கட்சியை ஆரம்பித்தால் அ.தி.மு.க.வின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று முதல்வர் எடப்பாடி, உளவுத்துறை மூலம் ரிப்போர்ட் எடுத்திருப்பதாக கூறுகின்றனர். அந்த ரிப்போர்ட்டைப் பார்த்ததும், அதை எடுக்கச் சொன்ன எடப்பாடியே அதிர்ந்து போனதாக சொல்லப்படுகிறது. காரணம், ரஜினி கட்சியைத் தொடங்கினால் அ.தி. மு.க.வைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மா.செ.க்கள் உள்ளிட்ட பலரும், தேர்தல் நேரத்தில் ரஜினி பக்கம் சென்று விடுவார்கள் என்று கூறியுள்ளனர். இந்த ஷாக் ரிப்போர்ட் பற்றி முதல்வர் ஆலோசித்ததோடு, பா.ஜ.க.வின் அத்துமீறலை எப்படி சமாளிக்கிறது என்றும் சீரியஸாக ஆலோசிக்கத் தொடங்கிவிட்டதாக தெரிவிக்கின்றனர்.