கடலில் பேனா சின்னம் வைப்பதற்கு நடிகை விந்தியா கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் கலைஞர் நினைவாகத் தமிழக அரசு மெரினாவில் பேனா சின்னம் அமைப்பதற்கு அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நடிகை விந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் சமீபத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக சார்பாகப் போட்டியிட்ட முன்னாள் எம்எல்ஏ தென்னரசு சுமார் 44 ஆயிரம் வாக்குகள் பெற்றார். இதற்கு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டங்கள் பிபி அக்ரஹாரம், சூரம்பட்டி மற்றும் மரப்பாலம் பகுதிகளில் நேற்று நடந்தது. அதில் விந்தியா பேசியதாவது: அரசு சிலை வைக்க வேண்டுமென்றால் 2000 ஆண்டுகளுக்கு முன்பு மனித சமுதாயம் எப்படி வாழ வேண்டும் என கூறிய திருவள்ளுவரின் எழுத்தாணிக்கு சிலை வைக்கலாம். சமூக நீதியை அரசியலமைப்புச் சட்டத்தில் உருவாக்கிய அம்பேத்கர் பேனாவிற்கு சிலை வைக்கலாம். பாரதியார், பாரதிதாசன், கம்பர், கண்ணதாசன் போன்றவர்களுக்கு பேனா சின்னம் அமைக்கலாம்.
ஆனால் கலைஞருக்காக 80 கோடி ரூபாய் செலவில் எழுதாத பேனா சின்னம் அமைக்க வேண்டிய அவசியம் என்ன. அவரது பேனா நினைத்திருந்தால் கச்சத்தீவை தாரை வார்ப்பதை தடுத்து இருக்கலாம். ஒன்றரை கோடி தமிழர்கள் இலங்கையில் கொல்லப்பட்டதை தடுத்து இருக்கலாம். காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்சனைகளை தீர்த்து இருக்கலாம். தமிழகத்தை மது இல்லாமல் மாற்றி இருக்கலாம்.
ஆனால் அவரது பேனா அவரது குடும்பத்தினருக்கு மட்டுமே பயன்பட்டது ஹிந்தி திணிப்பை, காங்கிரசை எதிர்த்து வளர்ந்த கழகம் திமுக. ஆனால் இன்று திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி போதிக்கப்படுகிறது. காங்கிரஸ் இல்லாமல் கூட்டணி இல்லை. இரண்டாண்டு ஆட்சி மக்களுக்கு துயரத்தையே அளித்துள்ளது. வீட்டு வரி, சொத்து வரி, மின் கட்டணம் உயர்வு, மணல் கொள்ளை, சந்து முனைகளில் சாராயக்கடை, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என பொதுமக்கள் எண்ணற்ற துயரத்தை அடைந்துள்ளனர். ஆட்சியில் மகிழ்ச்சியாக இருப்பது திமுகவினர் மட்டுமே” எனப் பேசினார்.
ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.வி. ராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ தென்னரசு, கட்சி நிர்வாகிகள் பழனிசாமி, பெரியார் நகர் மனோகரன், முருகசேகர், ராமசாமி மற்றும் பாஜக மொடக்குறிச்சி எம்எல்ஏ டாக்டர். சரஸ்வதி, தெற்கு மாவட்டத் தலைவர் வேதானந்தம் உட்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.