கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியின் பாஜக சட்டமன்ற வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வேலாயுதம்பாளையம் ரவுண்டானா பகுதியில் நேற்று (01.04.2021) பிரச்சாரம் மேற்கொண்டார். முன்னதாக வேலாயுதம்பாளையம் அரசு உயர்நிலை பள்ளியின் முன்புறம் உள்ள சாலையிலிருந்து தேசிய நெடுஞ்சாலை நொய்யல் வழியாக சுமார் 1 கி.மீட்டர் தூரம் பிரச்சார வாகனத்தில் ஊர்வலமாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
சாலையின் இரு புறங்களில் இருந்தும் அமித்ஷாவிற்கு மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அமித்ஷா பிரச்சார வேனில் இருந்து பேசினார். அப்போது அவர், “அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் பாஜக அண்ணாமலையை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும். ஒட்டுமொத்த தமிழகத்திலும் நேர்மையான அதிகாரி அண்ணாமலை. தமிழகத்தின் வளர்ச்சி வேண்டுமா? உதயநிதியின் வளர்ச்சி வேண்டுமா?
உதயநிதி ஸ்டாலினுக்கு ஒரே ஒரு ஆசை, மு.க.ஸ்டாலினை முதல்வராக்கிப் பார்ப்பதுதான். ஆகவே மக்களே, நீங்களே சொல்லுங்கள், தமிழகத்தில் ஊழல் செய்த காங்கிரஸ், திமுக உள்ளது. ஊழல் செய்யாத பாஜக உள்ளது. வாக்கு இயந்திரத்தில் தாமரை சின்னத்தில் வாக்குகளைப் பதிவு செய்யுங்கள். தமிழகத்தின் வளர்ச்சிக்கு ரூ. 1,60,000 கோடியை மோடி வழங்கியுள்ளார். தமிழகத்தின் வளர்ச்சியை பாஜக, அதிமுக, பாமக கூட்டணியைத் தவிர வேறு யாராலும் தர முடியாது” என்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக கரூர் வேட்பாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், முன்னாள் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்ட அதிமுக பிரமுகர்களும், கூட்டணிக் கட்சித் தலைவர்களும் உடனிருந்தனர்.
பிரச்சாரத்தை முடித்து புறப்பட்ட அமித்ஷா, கிருஷ்ணராயபுரம் தொகுதியில் உள்ள தன்னுடைய கட்சித் தொண்டரின் சாலையோர உணவகத்தில் அமர்ந்து, தமிழகத்தின் பாரம்பரிய உணவான இட்லி சாம்பார், ஆனியன் ஊத்தாப்பம் உள்ளிட்டவற்றை ரசித்து சாப்பிட்டார். அதன்பின் அங்கிருந்து புறப்படுகையில் அங்கு குவிந்திருந்த தொண்டர்கள் பலர், அவரிடம் ஆட்டோகிராஃப் பெற்றுக்கொண்டனர்.