திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் தி.மு.க. கூட்டணி மற்றும் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கிடையே மாநகராட்சியின் தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. இந்தநிலையில், தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு 17வது வார்டு ஒதுக்கியதின் பேரில் காங்கிரஸ் வேட்பாளராக குப்புசாமி களமிறங்கி இருக்கிறார். அதுபோல் 17வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் கணேசன் களமிறங்கி இருக்கிறார். ஆனால் ஆளுங்கட்சி கூட்டணி வேட்பாளரையும், எதிர்க்கட்சி வேட்பாளரையும் மிஞ்சும் அளவிற்கு 22 வயதான இளைஞர் வக்கீல் வெங்கடேஷ் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கி இருக்கிறார்.
திண்டுக்கல்லில் பிரபல தொழிலபதிரான சர்வேயர் ரத்தினத்தின் மகனான வெங்கடேஷ் சமீபத்தில் வக்கீல் படிப்பை முடித்தவர். மக்களுக்கு சமூக பணி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் சுயேட்சையாக 17வது வார்டில் களமிறங்கி இருக்கிறார். ஏற்கனவே இந்த 17வது வார்டு உள்பட மாநகரில் உள்ள பெரும்பாலான பொதுமக்களுக்கும், கூலித் தொழிலாளர்களுக்கும் நலத்திட்ட உதவிகளையும், சலுகைகளையும், கோவில் குளங்களுக்கு பண உதவிகளையும் அவ்வப்போது செய்து நகர மக்கள் மத்தியில் ஓரளவுக்கு சர்வேயர் ரத்தினம் பெயர் வாங்கி இருக்கிறார். அதன் அடிப்படையில் தான் தனது மகனின் விருப்பத்திற்கு ஏற்று சுயேட்சையாக களமிறக்கி இருக்கிறார்.
இப்படி சுயேட்சையாக களமிறங்கி உள்ள இளம் வேட்பாளரான வெங்கடேஷ் தனது பகுதியில் உள்ள வாக்காளர்களிடம் வாக்கு சேகரிக்க செல்லும்போது வாக்காளர்களுக்கு சால்வை அணிவித்து வாக்கு சேகரிப்பதுடன் மட்டுமல்லாமல், வார்டு முழுவதும் குழந்தைகள், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை முழுமையாக பாதுகாப்பதற்காக அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என்றும் வார்டு மக்களின் அவசர மருத்துவ உதவிக்கு புதிதாக ஆம்புலன்ஸ் வாங்கி செயல்படுத்தப்படும். அதுபோல் வார்டு முழுவதும் சோலார் லைட் வசதிகள் செய்து கொடுக்கப்படும். வார்டில் உள்ள அனைத்து நீர்நிலை தொட்டிகளும் அடிக்கடி சுத்தப்படுத்தப்படுவது மட்டுமல்லாமல் ஆர்.ஓ.ப்ளான்ட் அமைத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீராக பொதுமக்களுக்கு வழங்கப்படும். வார்டுக்கு உட்பட்ட மாணவிகளுக்கு உயர்க்கல்வி முழுமையாக கிடைத்திட வழிவகை செய்து கொடுக்கப்படும் என பல்வேறு வாக்குறுதிகளை வாக்காளர்கள் முன் வைத்து வாக்கு சேகரித்து வருகிறார்.