கடந்த 18 ஆம் தேதி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையிலான இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்திலிருந்து அதிமுக, ஐஜேகே, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டன. இதில் எடப்பாடி பழனிசாமி, புதுவை முதல்வர் ரங்கசாமி, கிருஷ்ணசாமி, மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் அஜித் பவார், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் ஏற்கனவே கூட்டணியிலிருந்த புரட்சி பாரதம், தேமுதிகவிற்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை அதேபோல் அதிமுக ஓபிஎஸ் அணி, டிடிவி. தினகரனின் அமமுக உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை.
இந்த நிலையில், பாஜகவுடன் இப்பொழுது வரை கூட்டணியில் நீடிக்கிறோம் என ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ. பன்னீர்செல்வம் பேசுகையில், “இன்று காலை ஆதிவாசி பெண்கள் இரண்டு பேர் கொடூரமான முறையில் இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே கொலை செய்யப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இது மாதிரியான சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பது அந்த மாநிலத்தினுடைய கடமையும் மத்திய அரசின் கடமையாக இருக்கிறது'' என்றார்.
அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'திண்டுக்கல் சீனிவாசன் மீண்டும் மு.க. ஸ்டாலினை முதல்வராக்குவோம் எனக் கூறியுள்ளாரே' என்ற கேள்விக்கு, “இது நீங்கள் சீனிவாசனிடம் கேட்க வேண்டிய கேள்வி. என்னிடத்தில் கேட்கிறீர்கள். எங்கிருந்தாலும் சீனிவாசன் வாழ்க'' என்றார்.
பாஜக தலைமையிலான கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் தாங்கள் அழைக்கப்படாதது குறித்த கேள்விக்கு, “எனக்கு அழைப்பு வரவில்லை. அதனால் நான் செல்லவில்லை. நான் உள்ளபடியே சொன்னால், அவர்களாக முறித்துக் கொள்ளும் வரை நான் அந்தக் கூட்டணியில் தொடர்வேன்” என்றார்.