இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன் வைத்தனர். அதில் 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு குறித்த கேள்விக்கு பதிலளித்த ராமதாஸ், 'அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. நாங்களும் அரசும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். அதற்கான தரவுகளை அரசு சேகரித்துக் கொண்டிருக்கிறது. எங்களை அடிக்கடி கூப்பிட்டு அது சம்பந்தமாக அரசு பேசுகிறது. முதலமைச்சரோடு இதுவரை நான்கு ஐந்து முறை தொலைபேசியில் பேசி இருக்கிறேன்.10.5 சம்மந்தமாக விரைவில் அரசு நல்ல முடிவு எடுக்கும் என்று நம்புகிறோம்.
என்னுடைய பாட்டாளி சொந்தங்களுக்கு அறிவுரை சொல்லத் தேவையில்லை. ஏனென்றால் அவர்கள் மற்றவர்களுக்கு அறிவுரை சொல்கின்ற அளவிற்கு அவர்களுக்கு வேண்டிய பயிற்சிகளை அரசியல் பயிலரங்கம் தொடர்ந்து கொடுத்து வருகிறது என்பதனால் அவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள், எல்லாம் அறிந்தவர்கள். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களும் நன்றாக வளமாக வாழ வேண்டும். அவர்களுடைய குழந்தைகளுக்கு நல்ல கல்வியை, உயர்ந்த கல்வியைத் தர வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்.
இன்னொரு விருப்பம் புகையில்லாத, மது இல்லாத தமிழகம். புகையிலை எந்த வடிவத்திலும் எந்த ரூபத்திலும் மக்களிடம் வரக்கூடாது. அது சிகரெட்டாகவோ அல்லது புகையிலையாகவோ அல்லது பொடியாகவோ வரக்கூடாது. வந்தால் தடை செய்வதற்கான எல்லா முயற்சிகளையும் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி எடுத்து வருகிறது. நான் அடிக்கடி சொல்வதுண்டு மும்மூர்த்திகள் கடவுள்கள் வந்து என்னிடம் எதிரில் வந்து உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டால், நான் இரண்டு வரத்தை எனக்கு கொடுங்கள் என்று கேட்பேன். முதல் வரம் மது இல்லாத தமிழகம். இன்னொன்று ஒரு சொட்டு மழை நீர் கடலில் போய் கலக்கக்கூடாது. இந்த இரண்டும் மட்டும் போதும் என்று சொல்வேன். இந்த இரண்டு வரத்தை தான் கேட்பேன்'' என்றார்.