அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான சிக்கல்கள் தற்போது வரை நீடித்துவரும் நிலையில், ஒருபுறம் ஓபிஎஸ் 'அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்' என அனைவருக்கும் அழைப்பு விடுத்து வருகிறார். எடப்பாடி பழனிசாமி தரப்போ இந்த அழைப்பை ஏற்க மறுத்து வருகிறது. இந்நிலையில் நேற்று உசிலம்பட்டி அதிமுக எம்எல்ஏ ஐயப்பன் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து 'என்னைப் போன்ற மேலும் பலர் ஓபிஎஸ் பக்கம் வருவார்கள்' என ஐயப்பன் செய்தியாளர் சந்திப்பில் வெளிப்படுத்தியிருந்தார்.
அதேபோல் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஓபிஎஸ், 'அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட தொடர்ந்து முயற்சிகளை எடுப்பேன்' எனக் கூறியிருந்தார். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ''தான் மட்டும் அனுதாபம் தேடும் முயற்சியில் பொதுமக்கள் மத்தியிலும், கட்சிக்காரர்கள் மத்தியிலும் எதைச் சொன்னாலும் ஏற்றுக்கொள்வார்கள் என்பதற்காக ஓபிஎஸ் பேசி வருகிறார். உங்களுடைய சுயரூபம் தமிழ்நாட்டு மக்களுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் தெரியும். எந்த மாதிரியான கருத்து சொன்னாலும் அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். 10 பேரை நான் ராஜினாமா செய்ய சொன்னேன் என்று சொல்கிறாரே அப்படி நான் சொல்லியிருந்தால் முதல் ஆளாக நான் ராஜினாமா செய்திருப்பேன். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கி தனியாக இருக்கும் பொழுது செய்தியாளர்கள் எல்லாம் என்னிடம் கேட்டார்கள் 'ஓபிஎஸ் மீண்டும் வந்தா நிதி அமைச்சர் பதவியை விட்டு தருவீர்களா' என்று கேட்டார்கள். நான் தாராளமாக விட்டு தருவேன். எல்லாருமே ஒன்றாக இருக்க வேண்டும், எம்ஜிஆர் உருவாக்கிய இந்த இயக்கம் எந்த நிலையிலும் சிதைந்து விடக்கூடாது ஒற்றுமையாக இருக்க வேண்டும். அவர் வரவேண்டும் அதற்காக நானே என்னுடைய நிதி துறையை அவரிடம் கொடுப்பேன் என சொல்லி இருந்தேன்.
நான் சொன்ன பிறகு ஒரு கூட்டத்தில் ஓபிஎஸ் பேசுகையில் 'இவரு வந்து எனக்கு பதவி கொடுக்கிறாராம் அப்படிப்பட்ட பதவி எனக்கு தேவையா?' என்று சொன்னவர் ஓபிஎஸ். அதன் பிறகு அதிமுகவில் சேர்ந்து ஒன்றான பிறகு நான் கொடுத்த அந்த நிதி அமைச்சர் பதவியை அவர் வேண்டாம் என்று சொல்லி இருக்க வேண்டும். ஆனால் அவர் அந்த பதவியை பதவியை தான் வகித்து வந்தார். அதோடு மட்டுமல்லாது உடுமலை ராதாகிருஷ்ணன் ஹவுசிங் போர்டு அமைச்சராக இருந்தார். அதையும் இவர் பிடுங்கிக் கொண்டார்.
புளியந்தோப்பில் கட்டப்பட்ட குடியிருப்பில் சுரண்டிய போது எப்படி எல்லாம் மண் கொட்டியது. இதற்கெல்லாம் எவ்வளவு கமிஷன் ஓபிஎஸ்-க்கு போயிருக்கும். இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார். ஓபிஎஸ் என்பதால் ஆளுங்கட்சி மூடி மறைத்து விட்டார்கள். இப்படி பணம் கொழிக்கும் இலாகாவில் இருந்து உலக கோடீஸ்வரர் வரிசையில் ஓபிஎஸ் இருக்கிறார். அந்த அளவிற்கு அவர் பண பலம் படைத்தவராக இருக்கிறார். சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார். அந்த உத்தமனை மக்கள் நம்ப தயாராக இல்லை. வாயெல்லாம் பொய்... காலையில பொய் மத்தியானம் பொய் நைட்டு போய்.. பொய்யிலே பிறந்த புலவர் போல பொய்க்கு அளவே இல்லாமல் போய்விட்டத போல ஓபிஸ்க்கு. வசூல்ராஜா எம்பிபிஎஸ் பார்த்திருப்பீங்க ஆனா வசூல்ராஜா ஓபிஎஸ்''என்றார்.