இந்த ஆண்டிற்கான முதல் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் தற்போது துவங்கியுள்ளது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்டு தமிழில் தனது உரையைத் தொடங்கினார். முன்னதாக ஆளுநர் ரவிக்கு சட்டமன்ற வளாகத்தில் காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர் சட்டப்பேரவை வளாகத்தில் அவர் உரையாற்றுவதற்கான மேடையில் ஏறி தமிழில் தனது உரையைத் தொடங்கினார். உரையில் அரசு தயாரித்த உரையை முழுமையாகப் படிக்காமல் சில வார்த்தைகளை ஆளுநர் தவிர்த்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தது. குறிப்பாக 'திராவிட மாடல்' என்ற வார்த்தை ஆளுநரால் தவிர்க்கப்பட்டுள்ளது. அதேபோல் 'தமிழ்நாடு கவர்ட்மென்ட்' என்ற வார்த்தைக்குப் பதில் 'திஸ் கவர்ட்மென்ட்' என மாற்றியுள்ளார்.
இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு தெரிவித்த கருத்தில், “அரசு தயாரித்துக் கொடுத்த அறிக்கையை முழுமையாக வாசிக்காமல் இவ்வாறு செய்திருப்பது அவருக்கு ஏற்புடையது அல்ல. சில வார்த்தைகளை மாற்றிப் பேசி இருப்பது வன்மையான கண்டனத்திற்கு உரியது. அரசியல் சாசனத்திற்கு விரோதமானது. இதைத்தான் படிக்க வேண்டும் அதை மாற்றுவதற்கோ திருத்துவதற்கோ அவருக்கு எந்த அதிகாரமும் அரசியலமைப்புச் சட்டம் வழங்கவில்லை. இது தமிழ்நாட்டுக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய மிகப்பெரிய அவமானம். இனிமேல் ஒரு நிமிடம் கூட அவர் ஆளுநராக நீடிப்பதற்குத் தகுதியற்றவர். உடனடியாக தமிழகத்தில் இருக்கக்கூடிய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகள் எல்லாம் ஒன்றாய் சேர்ந்து ஆளுநரை உடனடியாக திரும்பப் பெறுவதற்கு ஒரு மாபெரும் இயக்கத்தை தொடங்க வேண்டும். அதற்கு அனைத்துக் கட்சிகளும் முன்வர வேண்டும்'' என்றார்.