சட்டப் பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய சட்டப் பேரவையில் கேள்வி பதில் நேரம் துவங்கியது. கேள்வி பதில் நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக பேச முற்பட்டார்.
எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் நாளை எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தற்போது அரசினர் தீர்மானம் உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்தார். தொடர்ந்து அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
தொடர்ந்து அவையின் முன்னவர் மற்றும் அமைச்சருமான துரைமுருகன், ஆளுநர் தொடர்பாக சட்டப் பேரவையில் விவாதிக்கக் கூடாது என்ற விதிகளை தளர்த்துவதற்கான தீர்மானம் கொண்டு வந்தார். தீர்மானத்தை நிறைவேற்ற 4ல் 3 பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பதால், வாக்கெடுப்பில் அவையில் இருந்த 146 உறுப்பினர்களில் 144 பேர் ஆதரவாகவும், 2 பேர் (பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள்) எதிராகவும் வாக்களித்துள்ளனர்; தீர்மானத்தை ஆதரிப்போர் எண்ணிக்கை நான்கில் 3 பங்கிற்கும் அதிகமாக இருப்பதால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
தொடர்ந்து அரசினர் தனித் தீர்மானத்தை கொண்டு வந்த முதலமைச்சர், “பிரதமர் தமிழ்நாட்டிற்கு வரும்போதோ நான் பிரதமரை சந்திக்க செல்லும்போதோ அரசுக்கு எதிராக பேசுவதை ஆளுநர் வழக்கமாக கொண்டிருக்கிறார். சட்டமன்றத்திற்கு அரசியல் நோக்கத்தோடு இடைஞ்சல் தர நினைத்தால் அதனை கைக்கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும் என்ற அரசியல் சட்ட விதிகளை மாற்றுவதற்கான முன்னெடுப்பு எடுக்க வேண்டும்.
அரசியல் கட்சியின் கண்ணோட்டத்தில் ஆளுநர் செயல்படுவதால் அவருக்கு எதிராக 2வது முறையாக தீர்மானம் முன்மொழிய வேண்டிய சூழல். 2வது முறையாக ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரும் விரும்பத்தகாத நிகழ்வு வருத்தமளிக்கிறது; ஆளுநர் என்பதை தாண்டி அரசியல்வாதியாக செயல்படுகிறார்; தமிழ்நாடு சட்டமன்றத்தில் மக்கள் நலனுக்காக நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை பொது வெளியில் கொச்சைப்படுத்தி பேசியுள்ளார்; மக்களுக்காக சட்டத்தை இயற்றும் அதிகாரம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்திற்கு இருக்கிறது; ஆளுநர் மதச்சார்பின்மைக்கு எதிராக பேசுகிறார்; தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்துகிறார்; பேரவையை அவமதிக்கிறார்.
ஒருதலைபட்சம், கட்சி சார்பின்றி நம்பிக்கை அளிக்கும் வகையில் செயல்படுபவராக ஆளுநர் இருக்க வேண்டும் என அனுமந்தையா ஆணையம் கூறியது; சட்டத்திற்கு உட்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டும்; ஆளுநர் என்பவர் மாநில அரசின் நிர்வாகத்தில் குறுக்கிடாதவராக இருக்க வேண்டும் என அம்பேத்கர் குறிப்பிடுகிறார். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கும், மக்களுக்கும் வழிகாட்டுபவராக ஆளுநர் இருக்க வேண்டும்; ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்திற்கு மட்டுமே விசுவாசமாக இருக்க வேண்டும்; அரசியல் கட்சிக்கு அல்ல என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசுக்கும், மக்களுக்கும் நண்பராக இருக்க தயாராக இல்லை” என முதலமைச்சர் கூறினார்.