அண்மையில் தொடர்ச்சியாகத் தமிழக அரசிற்கும் ஆளுநருக்கும் இடையே கருத்து முரண்கள் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையே செந்தில் பாலாஜி விவகாரத்தில் அவரை அமைச்சரவையிலிருந்து நீக்கப்படுவதற்கான அறிவிப்பை ஆளுநர் மாளிகை வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த மோதல் இன்னும் அதிகரித்தது. தொடர்ந்து எதிர்ப்பின் காரணமாக ஆளுநர் மாளிகையின் அந்த அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் எங்கள் அமைச்சரவையில் இருக்கக்கூடிய திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான விசாரணையை வேகப்படுத்துவதற்கு ஆளுநர் கொடுக்கக்கூடிய அக்கறையை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர் கே.சி. வீரமணி ஆகியோரின் மீதான வழக்கை துரிதப்படுத்த ஏன் ஆர்வம் காட்டவில்லை எனத் தெரிவித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, அவர்கள் மீது வழக்கு தொடர அனுமதி தரக்கோரி தமிழக ஆளுநருக்கு கடிதம் எழுதி இருந்தார்.
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் மீதான வழக்குகள் தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. அந்த விளக்கத்தில், 'அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், பி.வி. ரமணா மீதான வழக்குகளை சிபிஐ விசாரிக்கிறது. எம்.ஆர். விஜயபாஸ்கர் மீதான வழக்குகள் பற்றி மாநில அரசிடமிருந்து விளக்கம் கிடைக்கவில்லை. முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீதான விசாரணையை நடத்தி வரும் மாநில அரசினுடைய கட்டுப்பாட்டில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை எந்த ஒரு தகவலையும் ராஜ்பவனுக்கு கொடுக்கவில்லை' என்று விளக்கம் கொடுத்துள்ளது ஆளுநர் மாளிகை.