சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், ‘ஸ்ரீ ராமரும் தமிழகமும் இணைபிரியாத பந்தம்’ என்ற நூல் இன்று வெளியிடப்பட்டது. இந்த நூலை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டார்.
இதில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “ராமர் கோவில் கும்பாபிஷேகத்தின் போது இந்த நாடு முழுவதும் ராமரின் பக்தியில் மூழ்கியிருந்தது. அப்போது, ராமர் வடமாநில கடவுள் எனவும் தமிழக மக்களுக்கு ராமரை தெரியாது என்ற கருத்தையும், தமிழகம் முழுவதும் கட்டமைத்தனர். சமூக ஊடகங்களில் இது போன்ற கருத்துக்களால், இளைஞர்கள் நமது கலாச்சார ஆன்மீக பாரம்பரியத்தை இழந்துள்ளனர். ஜோடிக்கப்படும் கருத்துக்களால் நமது கலாச்சாரம் படுகொலை செய்யப்படுகிறது. ராமர் எங்கும் உள்ளவர், அவரது தடங்கள் தமிழ்நாட்டில் எங்கும் உள்ளது.
தமிழகத்தில், சனாதனத்திற்கு எதிராக சில பேச ஆரம்பித்தனர். அதன் பிறகு, என்னமோ நடந்து திடீரென்று அவர்கள் அமைதியாகிவிட்டனர். சனாதனத்திற்கு எதிராக பேசியவர்கள் நிறுத்திவிட்டனர். சனாதன தர்மம் என்பது அனைவரையும் உள்ளடக்கியது. ராமரை நீக்கினால், பாரதம் எனும் இந்த நாடு இல்லை” என்று பேசினார். சனாதனத்தை பற்றி கடந்த ஆண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, தற்போது ஆளுநர் ஆர்.என்.ரவி மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.