பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115-வது ஜெயந்தி மற்றும் 60-வது குருபூஜை விழாவையொட்டி, இன்று (30/10/2022) காலை 10.00 மணியளவில் இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் பல்வேறு தரப்பினர், அரசியல் கட்சியினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதேபோல் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கும் பல்வேறு அரசியல் கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில் மதுரை கோரிப்பாளையத்தில் முத்துராமலிங்கர் சிலைக்கு மரியாதை செலுத்திய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், ''தமிழ்நாட்டை குழப்புவதற்காகவே ஒரு கவர்னர் வந்திருக்கிறார். அவர் அபாண்டமாக பேசுகிறார், அவதூறாக பேசுகிறார். அவரைப் போன்றவர்கள் தேவரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள்ளே வைத்தியநாத ஐயர் அழைத்துச் சென்றதற்கு பிரதான காரணம் பசும்பொன் தேவர் புகழ் தான். அதை இந்த நேரத்திலே நினைவூட்டுவதன் மூலமாக சாதி மத வேறுபாட்டுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை... இடமில்லை... என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்'' என்றார்.