போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார்.
அதே சமயம், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர். இதற்கிடையே இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாக்களான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு. முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது.
இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வது குறித்து முதல்வர் அலுவலகத்திற்கு நேற்று கடிதம் அனுப்பி இருந்தார். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு செந்தில் பாலாஜி எழுதியிருந்த கடிதத்தில், “தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்கிறேன். தங்களது தலைமையின் கீழ் மக்களுக்கு பணியாற்ற வாய்ப்பு அளித்ததற்கு நன்றி. நீதிக்காகப் போராடத் தனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்த முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி. தான் நிரபராதி, உண்மையை வெளிக்கொண்டு வர சட்ட ரீதியாகத் தொடர்ந்து போராடுவேன்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஜாமீன் அளிக்க வேண்டும் என்று மனு அளித்திருந்தார். இது தொடர்பான மனு இன்று (14-02-24) விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம், ‘அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி விலகிவிட்டதால் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும். அமைச்சராக இருப்பதால் சாட்சிகளை கலைத்துவிடுவார் என்ற அமலாக்கத்துறையின் வாதம் தற்போது செல்லாததாகிவிட்டது. வழக்கு தொடர்பான புலனாய்வும் நிறைவு, அனைத்து ஆதாரங்களை தாக்கல் செய்துவிட்டதாக அமலாக்கத்துறை கூறிவிட்டது. வழக்கில் தொடர்புடைய யாரும் யாருடைய வீட்டுக்கும் நேரில் சென்று மிரட்டல் விடுப்பதில்லை. மறைமுகமாக ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுப்பதாக இருந்தால் சிறையில் இருந்தும் கூட ஒருவரால் அச்சுறுத்த முடியும். அமலாக்கத்துறை முன்வைத்த அனைத்து வாதங்களும் செல்லாதவை ஆகிவிட்டன.
அமலாக்கத்துறை தாக்கல் செய்த அனைத்து ஆவணங்களையும் கடுமையான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். தவறுதலாக ஆதாரத்தைப் பதிவு செய்துவிட்டதாக வழக்கு விசாரணையின் போது அது பற்றி விளக்கக் கோருகிறது அமலாக்கத்துறை. தற்போதைய நிலையில், திருத்தப்படாத ஆதாரங்களைக் கொண்டு தங்கள் தரப்பை வாதிட அமலாக்கப் பிரிவுக்கு வழி இல்லை. தற்போது அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள ஆதாரங்களைக் கொண்டு விசாரணை நடத்தினால், செந்தில் பாலாஜியை விடுவித்தாக வேண்டும். அதனால், 270 நாட்களாக சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க வேண்டும்’ என்று வாதிட்டார்.
செந்தில் பாலாஜி தரப்பு வாதம் நிறைவடைந்த நிலையில், அமலாக்கத்துறை தரப்பு வாதங்களுக்காக விசாரணையை நாளை (15-02-24) பிற்பகல் 2:15க்கு ஒத்திவைப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.