புதுக்கோட்டைக்கு இன்று வந்த ஆளுநர் பன்வாரிலால் மாநில சுயாட்சிக்கு எதிராக ஆய்வுகள் செய்வதாக திமுக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் கருப்புக் கொடி காட்டும் போராட்டத்திற்கு தயாரான நிலையில் ஆளுநர் வரும் முன்பே கைது நடவடிக்கை தொடங்கியதால் கருப்பு கொடியை காட்டிவிட்டு கைதானார்கள்.
இதில், திமுக சமஉக்கள் புதுக்கோட்டை பெரியண்ணன் அரசு, திருமயம் ரகுபதி, ஆலங்குடி மெய்யநாதன், மற்றும் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன், முன்னால் சமஉ க்கள் ராஜசேகரன், உதயம் சண்முகம், மற்றும் கவிதைப்பித்தன் உள்ளிட்ட சுமார் 825 பேர் கைது செய்யப்பட்டு 3 திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மாலை வரை ஆளுநர் ஆய்வு மற்றும் மனு வாங்கும் நிகழ்ச்சிகள் நடந்தது. அதன் பிறகும் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்படாததால் மண்டபத்திற்குள்ளிருந்து கூச்சல் போட்டனர். தொடர்ந்து பேட்டியளித்த ரகுபதி எம் எல் ஏ.. உணவு தண்ணீர் கூட கொடுக்காமல் அடைத்து வைத்துள்ளனர். கருப்பு கொடி காட்டி எதிர்ப்பை தெரிவிப்பது எதிர்கட்சிகளின் உரிமை. அதற்காக கைது செய்துவிட்டு இப்போது பிணை கிடைக்காத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய தயாராகி வருவதாக தெரிகிறது என்றார்.
இந்த நிலையில் நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்ய கணினி ஆபரேட்டர்களை அழைத்திருப்பதாவும் தெரியவருகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.