Skip to main content

அரசு வேலை மோசடி; அதிமுக ஒ.செ. பணம் வாங்கிய வீடியோ ஆதாரம்; கில்லாடி நல்லதம்பி

Published on 03/12/2022 | Edited on 03/12/2022

 

Government job fraud! AIADMK union secretary paid video evidence!

 

அதிமுக ஆட்சியில், விருதுநகர் மாவட்டம் - வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்தவர் விஜய நல்லதம்பி. இவர் முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் சகோதரர். 

 

விஜய நல்லதம்பி சிவகாசி தாயில்பட்டி அருகே கோட்டையூரைச் சேர்ந்த கிருஷ்ணவேணி என்பவருக்கு சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 ½ லட்சம் வாங்கினார்.  கிருஷ்ணவேணியின் கணவர் தங்கதுரையும், கிருஷ்ணவேணியின் தம்பி சதீஷும், அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ராமலட்சுமியின் கணவர் கணேசனும், விஜய நல்லதம்பியின் சொந்த ஊரான ராமத்தேவன்பட்டியிலுள்ள அவருடைய வீட்டில் வைத்து அந்தப் பணத்தைக் கொடுத்தனர். 

 

கிருஷ்ணவேணியின் கணவர் தங்கதுரை, விஜயநல்லதம்பியிடம் ஆக்டிங் டிரைவராக வேலை பார்த்தார்.  அப்போது, "உன் மனைவி கிருஷ்ணவேணிக்கு சத்துணவு அமைப்பாளர் போஸ்டிங் வாங்கித் தர்றேன். மூன்றரை லட்சம் கொடு. வேலைக்கான ஆர்டர் வாங்கித் தர்றேன்" என்று விஜய நல்லதம்பி கூற,  தங்கதுரையும்  நம்பிக்கையோடு கொடுத்துள்ளார்.  

 

கிருஷ்ணவேணியும் தங்கதுரையும்  தாயில்பட்டி கூட்டுறவு வங்கியில் நகைகளை அடகு வைத்து ரூ.2 லட்சமும் வீட்டுப் பத்திரத்தை அடமானம் வைத்து ரூ. 1.5 லட்சமும் திரட்டியுள்ளனர். மொத்த பணத்தையும் விஜய நல்லதம்பியிடம் கொடுத்தபோது,  உடன் சென்ற கிருஷ்ணவேணியின் தம்பி சதீஷ், யாருக்கும் தெரியாமல் தன்னுடைய செல்போனில் அதை வீடியோவாக பதிவு செய்தார்.

 

நெடுநாட்களாகியும் சத்துணவு அமைப்பாளர் வேலையும் வாங்கித் தராமல் வாங்கிய பணத்தையும் திருப்பித் தராமல்  அலையவிட்ட விஜய நல்லதம்பி அந்தப் பணத்தை மோசடி செய்துள்ளார்.  பிறகு அரசு வேலைக்காக பணம் கொடுத்தபோது  தம்பி சதீஷ் எடுத்த வீடியோ ஆதாரத்தை வைத்து விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு சார்பு ஆய்வாளரிடம் புகார் அளித்தார் கிருஷ்ணவேணி. 

 

காவல்துறையின் விசாரணையில், குற்றச்சாட்டுக்கான முகாந்திரம் இருப்பது தெரிந்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். அந்த வீடியோவில் விஜய நல்லதம்பி என்ன பேசியிருக்கிறார் என்றால்,  “14-ஆம் தேதி இன்டர்வியூ. 15-ஆம் தேதி ஆர்டர் காபி வந்திரும். அமைச்சருக்கு கொடுக்கணும். விருதுநகர் கலெக்டரே வாங்குறாரு. மூன்றரை லட்சத்தை கம்பல்சரியா கொடுத்தாகணும்.” என்று அளந்துவிடுகிறார். அப்போது  பணம் கொண்டு வந்தவர்கள், “எந்த திசையைப் பார்த்து பணம் கொடுக்கணும்? என்று கேட்கிறார்கள். அதற்கு  விஜய நல்லதம்பி,   “மனசு நல்ல மனசா இருந்தா போதும்” என்று சொல்கிறார். 

 

கிருஷ்ணவேணி தொடர்ந்த இந்த வழக்கில்,  சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை விஜய நல்லதம்பியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.  அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விஜய நல்லதம்பி மேல் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று ஆட்சேபனை தெரிவித்ததால் அவருக்கு முன்ஜாமீன் கிடைக்கவில்லை.  

 

உயர்நீதிமன்ற வேலைக்கு ஆர்டர் வாங்கித் தருவதாகவும் விஜய நல்லதம்பி மோசடி செய்திருக்கிறார்.  தன்னுடைய சொந்த அண்ணன் ரவிச்சந்திரன், அண்ணி வள்ளி மீது  ரூ.70 லட்சம் மோசடி புகார் கொடுத்தார் விஜய நல்லதம்பி. அது பொய்யான வழக்கென்று சாட்சியங்கள் மூலம் நிரூபணமானது. இந்த விஜய நல்லதம்பி தான் ரூ.3 கோடி மோசடி புகாரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை தெறிக்கவிட்டார். ராஜேந்திர பாலாஜி தலைமறைவாகி கைதாகி சிறையில் அடைபட்டதும் இன்றுவரையிலும் நிபந்தனை ஜாமீனில் அல்லாடுவதும்  இந்த விஜய நல்லதம்பியின் கைங்கரியத்தினால்தான்.  

 

தன் மீதான குற்றச்சாட்டுக்கு விஜய நல்லதம்பி அளித்த விளக்கம் இது - “அரசியல்ல இருந்தா யாராவது ரெண்டு பேர் புகார் கொடுக்கத்தான் செய்வாங்க. அரசு வேலைக்கு மத்தவங்ககிட்ட பணம் வாங்கிக் கொடுக்குறது மட்டும்தான் எனக்கு பொழப்புன்னு கிடையாது. எங்கே தொலைச்சோமோ, அங்கேதானே தேட முடியும். எல்லா பழியவும் என்மேல போடறாங்க.” என்கிறார். பலே தில்லாலங்கடியாக இருக்கிறார் விஜய நல்லதம்பி.

 

 

சார்ந்த செய்திகள்