!['Hindi dump can never be accepted' -OPS comment!](http://image.nakkheeran.in/cdn/farfuture/6L2xW9WsUeC3v2vvjywTTxfWBTVwVB3NfthaxVqIvBo/1649491360/sites/default/files/inline-images/O_1.jpg)
டெல்லியில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது, "அலுவல் மொழியான ஹிந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. ஹிந்தி மொழியை உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல, ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும். வெவ்வேறு மொழி பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது அது இந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும்" எனப் பேசியிருந்தார்.
மத்திய உள்துறை அமைச்சரின் இத்தகைய கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் தங்களது கண்டங்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ஓபிஎஸ் இதுகுறித்து தெரிவித்துள்ளதாவது, ''இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இருமொழி கொள்கையில் உறுதியாக உள்ளோம். அண்ணா கூறியவாறு இந்தியை தேவையெனும் பட்சத்தில் மனமுவந்து கற்றுக்கொள்ள நினைப்பவர்கள் கற்றுக் கொள்ளலாம். நீண்ட நாட்களாக தமிழகத்தில் இருமொழி கொள்கைதான் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்தியாவில் இன்றுவரை ஆங்கிலம் என்ற மொழி இருக்கிறதென்றால் அதற்கு மூலகாரணமே அண்ணாதான்'' என டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறியவாறு, இந்தி மொழி தேவையெனும் பட்சத்தில் மனமுவந்து கற்றுக்கொள்ள நினைப்பவர்கள் கற்றுக் கொள்ளலாம்; ஆனால் இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
— O Panneerselvam (@OfficeOfOPS) April 9, 2022
பேரறிஞர் அண்ணா அவர்கள் வழியில் இருமொழிக் கொள்கையில் அஇஅதிமுக உறுதியாக உள்ளது. #StopHindilmposition pic.twitter.com/rE0muMjpNn