Skip to main content

கலந்து கொள்வது எனது உரிமை..! -அ.தி.மு.க. அமைச்சர்கள் நிகழ்வில் தி.மு.க. மாஜி அமைச்சர்!

Published on 14/09/2020 | Edited on 14/09/2020

 

 

அ.தி.மு.க. அமைச்சர்கள் பங்கேற்ற விழாவில், திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்ட கூடுதல் பள்ளிக் கட்டடம் மற்றும் ஆய்வகத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல்துறை அமைச்சா் கே.சி.கருப்பணன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை பூமி பூஜையிட்டு தொடங்கிவைத்தனர். 

 

இந்த விழாவில் திமுக முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜாவும் பங்கேற்றது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2006 - 2011 திமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்தவர் என்.கே.கே.பி. ராஜா. ஆள் கடத்தல் புகாரில் தி.மு.க. தலைமையால் பதவி பறிக்கப்பட்ட இவர் மாவட்ட செயலராக இருந்து வந்தார். 2011 ஆம் ஆண்டில் அந்தியூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன்பிறகு ஈரோடு மாவட்ட கட்சி அமைப்பில் வடக்கு, தெற்கு என பிரிக்கப்பட்ட பிறகு, அவரிடம் இருந்து மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டு தெற்கு மாவட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் சு.முத்துசாமியும், வடக்கு மாவட்டத்திற்கு ராஜாவின் ஆதரவாளரான  நல்லசிவமும் நியமிக்கப்பட்டனர். தெற்கு மா.செ. முத்துசாமியுடன் மோதல் போக்கில் ஈடுபட்டுவந்த என்.கே.கே.பி.ராஜா, கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஈரோட்டில் பங்கேற்கும்  நிகழ்ச்சிகளுக்கு மட்டும் வந்து சென்றார். பிற நிகழ்வுகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார். மேலும் அவரை பொதுவெளியில் பார்ப்பதும் அரிதாகவே இருந்தது. சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் இந்த சமயத்தில் அதிமுக அமைச்சர்களுடன், அவர் அரசு விழாவில் பங்கேற்றது தி.மு.க., அதிமுகவினர்  மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

இதுபற்றி நாம் அவரிடம் கேட்டபோது, "அய்யம்பாளையம் எனது சொந்த ஊர். அங்கு பள்ளிக்கூடம் கட்ட நான் நிதியுதவி கொடுத்தேன். அது மட்டுமில்லாமல் அந்த பகுதி பால் கூட்டுறவு சங்கத்திற்கு நடைபெற்ற தேர்தலில் திமுகவை சேர்ந்த 11 பேர் வெற்றி பெற்றார்கள். ஆனால் அதிமுகவினர் அந்த வெற்றியை தடுத்து பிரச்சனை ஏற்படுத்தியதால் அந்த வாக்குப்பெட்டி எண்ணாமல் ஆறுமாதம் இருந்தது. 

 

இந்த நிலையில் திமுகவை சேர்ந்த நான் பணம் கொடுத்து பள்ளி கட்டிடம் கட்டிய அந்த நிகழ்வில் கலந்து கொள்வது எனது உரிமை. அரசு பள்ளிக்கூடம் என்பதால் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மாவட்ட அமைச்சர் கருப்பணன் வந்திருந்தனர். ஆகவே எனது உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது. அங்கு நடந்த நிகழ்வு திமுகவைச் சேர்ந்த என்னால் நடைபெற்றது என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்