காங்கிரசின் தோல்விகளுக்கு ராகுல் காந்தியே காரணம் என குலாம் நபி ஆசாத் குற்றம் சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கட்சியின் தனது அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும் விலகியுள்ளார். காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து பதவி விலகிய நிலையில் தற்போது குலாம் நபி ஆசாத்தும் பதவி விலகியுள்ளார். இது ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
தான் கட்சியில் இருந்து விலகுவதாக கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு ஐந்து பக்க அளவில் கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது பல குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். இதில், "காங்கிரசில் கலந்தாலோசனை முறை முற்றிலுமாக ஒழிந்துவிட்டது. 2014ம் ஆண்டு தேர்தல் தோல்விக்கு ராகுலின் குழந்தைத்தனமான நடவடிக்கைகளே காரணம். காங்கிரசில் சோனியா காந்தி பெயரளவிலான தலைவராகவே உள்ளார். ஆனால் கட்சியின் அனைத்து முடிவுகளையும் ராகுல் காந்தியே எடுக்கிறார். காங்கிரஸ் கட்சியிலும் ரிமோட் கன்ட்ரோல் முறை வந்துவிட்டது. காங்கிரஸ் தற்போது செயலிழந்த கட்சியாக மாறிவிட்டது. இந்த தோல்வியில் இருந்து மீள்வது கடினம். கட்சியில் யாரும் மூத்த தலைவர்களை மதிப்பதில்லை. இதற்கு முன் நான் வகித்த அனைத்து பொறுப்புகளுக்கு நன்றி" என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.