
கர்நாடக மாநிலத்தில் மே மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சியைத் தக்கவைக்க ஆளும் பாஜகவும் ஆட்சியை மீண்டும் பிடிக்க காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகளும் தீவிரமாகக் களப்பணியாற்றி வருகின்றனர். அந்தந்த கட்சித் தலைவர்கள் கர்நாடக மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி இந்த மாதம் மட்டும் இரு முறை கர்நாடகத்திற்கு வந்துள்ளார். அதேபோல் அமித்ஷா சில தினங்கள் முன் கர்நாடகா வந்தார் அதேபோல் தற்போது இரண்டாவது முறையாக வந்துள்ளார்.
இன்று குந்துகோலில் நடைபெற்ற பாஜகவின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். பின் குந்துகோல் வார்டு பகுதிகளுக்குச் சென்று சுவர் விளம்பரப் பணிகளைத் துவக்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக தார்வாட் பகுதியில் வீட்டின் சுவற்றில் வரையப்பட்ட தாமரைச் சின்னத்திற்கு காவி நிற வண்ணத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா தீட்டினார். இந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பகிரப்படுகிறது.
கூட்டத்தில் பேசிய அமித்ஷா, “காங்கிரஸ், காந்தி குடும்பத்தை மட்டுமே கொண்டாடுகிறது. தாத்தா, மகன், பேரன், அவர்களின் மனைவிகள், பேரன் மகன் என அனைவரும் தேர்தலில் போட்டியிட விரும்புகிறார்கள். இளைஞர்களுக்கு அந்த கட்சியில் இடம் இருக்கிறதா?” எனக் கூறினார்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் பேசிய அமித்ஷா, “உங்களால் நாட்டிற்காக உயிரை தியாகம் செய்ய முடியாவிட்டால் உங்கள் வாழ்க்கையை உங்கள் தேசத்திற்காக வாழ்ந்து நாட்டின் முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும். அதற்கான அனைத்து வாய்ப்புகளையும் மோடி உருவாக்கியுள்ளார். பிரதமரின் தொலை நோக்குப் பார்வையால் மாணவர்களின் வாழ்க்கைக்கு தேவையான பல வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் நாட்டிற்காக உழைக்க வேண்டும். புதிதாக சிந்தியுங்கள். தைரியமாக இருங்கள். முன்னோக்கிச் செல்லுங்கள். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி நாட்டை உலகில் முதல் இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்” எனக் கூறினார்.