மிஸ்டர் திருமாவளவன் என ஆரம்பித்து.. விடுதலைச் சிறுத்தைகளை கடுமையாக விமர்சித்து வந்த காயத்ரி ரகுராம், பாஜகவில் இருந்து விலகிய பிறகு அண்ணன் திருமா என அழைப்பது பாஜகவினரை மேலும் சூடாக்கியுள்ளது.
கமலாலய சர்ச்சைகளை பொதுவெளியில் பேசியதற்காக, பிரபல நடிகையும் பாஜக நிர்வாகியுமான காயத்ரி ரகுராம் திடீரென அக்கட்சியில் இருந்து 6 மாத காலத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனால், இதற்கு முன்னரே பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் அக்கட்சியின் மூத்த தலைவர்களுக்கும் ஒரு விதமான மோதல் போக்கு இருந்ததாகக் கூறப்படுகிறது. அதில், ஒருவர் தான் காயத்ரி ரகுராம். அதைத் தொடர்ந்து, திருச்சி சூர்யா - டெய்சி உடனான ஆபாச ஆடியோ சர்ச்சைக்கு வாய்ஸ் கொடுத்துவந்த காயத்ரி ரகுராம் திடீரென கட்சியில் இருந்து ஒதுக்கப்பட்டார்.
ஆனால், இதை முன்கூட்டியே தெரிந்து கொண்ட காயத்ரி ரகுராம், "நீங்க யாரு என்ன கட்சிய விட்டு தூக்குறது. நானே போறேன்" என வெளிய வந்த அவர், அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். தமிழக பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என கூறிவரும் காயத்ரி ரகுராம், ஈரோடு இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட்டால் அவரை எதிர்த்து நான் நிற்பேன் என்றும் கூறியிருந்தார்.
இதையடுத்து, அண்ணாமலைக்கு எதிராக ஏப்ரல் 14ஆம் தேதியன்று சக்தியாத்ரா என்ற பெயரில் பாதயாத்திரை ஒன்றை மேற்கொள்ளப் போவாதாக அறிவித்த காயத்ரி ரகுராம், சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைமை அலுவலகமான அம்பேத்கர் திடலில் அக்கட்சியின் தலைவரான தொல்.திருமாவளவனை நேரில் சந்தித்துள்ளார்.
மேலும், அம்பேத்கர் திடலுக்கு வந்த காயத்ரி ரகுராமை வரவேற்ற திருமாவளவன், அவருக்கு 'உலக வரலாற்றில் பெண்கள்' எனும் நூலைப் பரிசாக அளித்து பொன்னாடை போர்த்தி மரியாதை அளித்துள்ளார். இது குறித்து, காயத்ரி ரகுராம் அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, "எதிர்பாராத மனிதர்கள் எனக்கு உதவியபோது.. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்களுக்கும், வி.சி.க.வுக்கும் எனது நன்றிகள். மரியாதை நிமித்தமான அற்புதமான சந்திப்பு” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலத்தில் திருமாவளவனை அவதூறாக பேசிவந்த காயத்ரி ரகுராம், தற்போது அண்ணன் திருமாவளவன் என அழைத்து நன்றி தெரிவித்திருப்பது, அரசியல் களத்தின் நாகரீகத்தை வெளிப்படுத்தியுள்ளது. மேலும், இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
- சிவாஜி