திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டில் அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் கோபி தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். வத்தலக்குண்டு நகரச் செயலாளர் பீர்முகமது வரவேற்றார். கூட்டத்தில் நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி சேகர், நத்தம் ஒன்றிய குழு தலைவர் கண்ணன் ஆகியோர் பேசினர். அதன்பின் கூட்டத்தில் சிறப்புரையாற்றிய திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விசுவநாதன், “பி.ஜே.பி., காங்கிரஸ் என மத்திய அரசில் 15 ஆண்டுகாலம் தி.மு.க. அங்கம் வகித்திருந்த வேலையில்தான் தமிழகத்தில் மத்திய அரசுகள் மெல்லமெல்ல இந்தியைத் திணித்தன.
ஆனால், மும்மொழிக் கொள்கையை எதிர்த்து தமிழ் மொழியை அ.தி.மு.க. அரசுதான் பாதுகாத்துள்ளது. தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நாள்தோறும் ஒவ்வொரு வேடம் போடுகிறார். தற்போது கடவுள் மறுப்புக் கொள்கையிலிருந்து விலகி, வேல் ஏந்தி வேடம் போட்டுள்ளார். அ.தி.மு.க.வை நிராகரிக்கின்றோம் என்று ஊர் ஊராகச் சென்று கிராமசபை நாடகம் நடத்துகிறார்.
தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் தி.மு.க. செய்த துரோகங்களையும் பட்டியலிட்டு தி.மு.க.வை நிராகரிக்கின்றோம் என்ற பதாகைகளை அ.தி.மு.க.வினர் வைக்க வேண்டும். பொதுமக்களிடம் தி.மு.க.வை நிராகரிக்கின்றோம் என்ற முழக்கங்களை எடுத்துச் செல்ல வேண்டும்” என்று கூறினார்.
கூட்டத்தில் ஒன்றியச் செயலாளர்கள், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் மாணவர் அணி நிர்வாகிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.