ஜார்க்கண்ட் மாநில முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் பதவி வகித்து வந்தார். இந்தச் சூழலில் இவர் சுரங்க முறைகேட்டுடன் தொடர்புடைய பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, ஹேமந்த் சோரன் மீதான சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஹேமந்த் சோரனை அவரது இல்லத்தில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி (31.01.2024) விசாரணை மேற்கொண்டனர்.
இதனையடுத்து ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியான நிலையில் ஹேமந்த் சோரன் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் ஹேமந்த் சோரனை கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த சம்பாய் சோரன் ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் 28ஆம் தேதி (28.06.2024) ஹேமந்த் சோரனுக்கு ஜாமின் வழங்கி அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து முதல்வராக இருந்த சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன் தொடர்ச்சியாக ஹேமந்த் சோரன் கடந்த ஜூலை 4 ஆம் தேதி (04.07.2024) முதல்வராகப் பதவியேற்றார்.
இத்தகைய சூழலில் தான் ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் அதில், “சட்டமன்றக் கூட்டத்தில் நான் கனத்த மனதுடன் சொன்னேன் ‘என் வாழ்வின் புதிய அத்தியாயம் தொடங்கப் போகிறது’. இதில் எனக்கு மூன்று விருப்பங்கள் இருந்தன. முதலாவதாக, அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது. இரண்டாவதாகச் சொந்தமாக அமைப்பை (கட்சி) நிறுவுவது. மூன்றாவதாக, இந்தப் பாதையில் யாரேனும் துணை இருந்தால், அவருடன் பயணிக்க வேண்டும். மேலும் எனக்கு முன்பாக எல்லா வாய்ப்புகளும் திறந்தே உள்ளன. கட்சியில் அவமானப்படுத்தப்பட்டேன். கட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்டேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து சம்பாய் சோரன் பாஜகவில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் சம்பாய் சோரன் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகினார். அதற்கான கடிதத்தை எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு அதில், “ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் உறுப்பினர் மற்றும் அனைத்து பதவிகளில் இருந்தும் இன்று ராஜினாமா செய்தேன். ஜார்கண்ட் மாநிலத்தின் பழங்குடியினர், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சாமானிய மக்களின் பிரச்சினைகளுக்கு எதிராக எங்களது போராட்டம் தொடரும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.