காஷ்மீரில் கவர்னரின் ஆலோசகராக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் டி.ஜி.பி. விஜயகுமார், வீட்டுக்கு அனுப்பப்பட்டு விட்டதாக சொல்லப்படுகிறது. காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்புச் சலுகைகளை ரத்துசெய்த பா.ஜ.க. அரசு, அங்கு போராட்டங்கள் வெடிக்காமல் இருக்க, பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா உள்ளிட்ட தலைவர்களை வீட்டுச்சிறையில் வைத்தது. அங்கு மக்களின் போராட்டங்களும் கடுமையாக ஒடுக்கப்பட்டன. இந்த முயற்சியின்போது மனித உரிமை மீறல்கள் அரங்கேற்றப்பட்டதாகவும், அதற்குக் காரணமாக இருந்தவர் இந்த விஜய குமார் தான் என்று பலரும் குற்றம் சாட்டி இருந்தார்கள்.
இந்த நிலையில் அவருடைய பணி நீட்டிப்புக்காலம் 30-ந் தேதியோடு முடிவடைந்துள்ளது. மீண்டும் தனக்கு பணி நீட்டிப்பு கிடைக்கும் என்று விஜயகுமார் எதிர்பார்த்திருந்த நிலையில், ஜம்மு- காஷ்மீரையும், லடாக்கையும் தனித்தனி யூனியன் பிரதேசமாக அறிவித்த மோடி அரசு, அதை செயல்படுத்திய நாளில் விஜயகுமார் ஐ.பி.எஸ்.ஸுக்கு பணி நீட்டிப்பைத் தராமல், அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் கவர்னர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்த விஜயகுமாருக்கு பெரிய ஏமாற்றம் கிடைத்ததாக சொல்கின்றனர்.