Skip to main content

“மோடி நாட்டின் காவலாளி அல்ல; எடப்பாடியின் ஊழல் ஆட்சிக்குக் காவலாளியாக இருக்கும் களவாணி” மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

Published on 12/04/2019 | Edited on 12/04/2019

 

கடலூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகையில்,  
 

கடந்த 20 ஆம் தேதியில் இருந்து என்னுடைய பிரச்சாரப் பயணத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றேன். அப்படி நடத்தி வருகின்ற பொழுது திராவிட முன்னேற்ற கழகம் கலைஞர் அவர்கள் தலைமையில் ஐந்து முறை ஆட்சிப் பொறுப்பில் இருந்த நேரத்தில் அப்பொழுது அந்த ஆட்சியைப் பயன்படுத்தி, நீங்கள் தந்த அந்த அதிகாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன செய்திருக்கின்றோம் எப்படிப்பட்ட திட்டங்களை உருவாக்கி இருக்கிறோம் என்று அழுத்தம் திருத்தமாக நம்முடைய பிரச்சாரக் கூட்டத்தில் நாம் தொடர்ந்து பேசுகின்றோம்.

 

அதேபோல், மீண்டும் பொறுப்பிற்கு வருகின்ற பொழுது என்னென்ன பணிகளை ஆற்றிட போகின்றோம் என்பதைப் பற்றி தெளிவாக விளக்கமாக சுட்டிக்காட்டுகின்றோம். அவைகள் எல்லாம் பத்திரிகைகளில், தொலைக்காட்சிகளில் செய்திகளாக வருகின்றது. அதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

 

mkstalin



நான் இதைக் குறிப்பிட்டு சொல்வதற்கு என்ன காரணம் என்று கேட்டீர்கள் என்றால், வாராவாரம் தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி வந்து விட்டுப் போகின்றார். அப்படி வருகின்றவர் இதுவரையில் ஆட்சியைப் பயன்படுத்தி, ஏதாவது செய்து இருக்கின்றோம் அல்லது அதற்கு ஆதரவு தந்து அந்த கட்சியோடு கூட்டணி வைத்துக் கொண்டிருக்கக்கூடிய எடப்பாடி அவர்கள் மத்திய ஆட்சியை பயன்படுத்தி, இவற்றையெல்லாம் தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்து சேர்த்து இருக்கின்றோம் என்று அவர்களால் சொல்ல முடியுமா? நிச்சயமாக முடியாது. அதுமட்டுமல்ல, தேர்தல் பயணத்தை துவங்கும் முதல் நாளான 19ஆம் தேதி, திராவிட முன்னேற்ற கழகம் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு விட்டு புறப்பட்டேன். நான் வெளியிட்டதற்கு பிறகு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராகுல் காந்தி அவர்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்கள். இப்பொழுது இரண்டு நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி அவர்கள் பி.ஜே.பி கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றார்.

 

மோடியின் தேர்தல் அறிக்கையில் முக்கியமான வேடிக்கையான ஒன்று. என்னவென்றால், முதலில் நாங்கள் மக்களின் தேவைகளை நிறைவேற்றினோம். இனி அவர்களது விருப்பங்களை நிறைவேற்ற போகின்றோம் என்கிறார். அதாவது மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற போகிறோம். மக்களின் விருப்பம் என்னவென்று தெரியுமா? நீங்கள் உடனே நீங்கள் வீட்டிற்கு போக வேண்டும் என்பது தான். ஆகவே, மக்களின் விருப்பத்தை ஏற்று அவரை வீட்டிற்கு அனுப்ப வேண்டிய பொறுப்பை, வருகின்ற 18ஆம் தேதியில் நாடாளுமன்றத் தேர்தலில் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடக்கூடிய ரமேஷ் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் ஆதரவு தரவேண்டும். அதேபோல், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிக்கு போட்டியிடக்கூடிய தொல்.திருமாவளவன் அவர்களுக்கு பானைச் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கின்றேன்.
 

மோடி அவர்கள் பிரச்சாரத்தில் இப்பொழுது புது முறையை கையாளுகின்றார். நீலிக் கண்ணீர் வடிக்கின்றார், மக்களின் அனுதாபத்தை பெறுவதற்காக திடீரென்று இப்பொழுது நான் ஏழைத் தாயின் மகன் என்று சொல்கின்றார். மீண்டும் சொல்லுகின்றார். ஏழைத்தாயின் மகனாக இருக்கக்கூடிய நான் இந்தியாவை ஆள்வது ராகுல் காந்திக்கு பிடிக்கவில்லை என்று ஒரு புது அர்த்தத்தை செய்தியை கண்டுபிடித்து இப்பொழுது அவர் பேசிக்கொண்டிருக்கின்றார். நான் கேட்கின்றேன். ஏழைத்தாயின் மகன் பரம ஏழைகளாக மாற்றியிருக்கிறார். அதேபோல் பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறார். இதே ஏழைத்தாயின் மகன் செய்யக்கூடிய காரியமா?

 

இந்து பத்திரிகையில் ஒரு செய்தி வெளியிட்டார்கள். என்ன செய்தி என்றால், மோடியின் மிகப்பெரிய மெகா ஊழல் ஒன்று. ரஃபேல் போர் விமான ஊழல். அந்த ஊழல் ஆதாரங்கள் விசாரிக்கப்படும் என்று நேற்றைக்கு உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்துவிட்டது. எனவே, உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என்ற தீர்ப்பு வந்ததற்குப் பிறகு, பிரதமர் மோடியின் முகத்தில் கரி பூசப்பட்டிருக்கின்றது. அவர், தேர்தல் அறிக்கையில் என்ன சொல்லுகிறார் என்றால், ஐந்து வருடமாக எங்கள் ஆட்சியில் ஊழல் இல்லை என்றார். அந்த அறிக்கை வந்த அடுத்த நாளே நீதிமன்றம் அதில் ஊழல் நடந்து இருக்கின்றது அதை விசாரிக்க வேண்டும் என்று தீர்ப்பு வந்திருக்கிறது.

 

mkstalin


எனவே, போர் விமான ஊழல் அந்த ஆதாரங்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு கொண்டு சென்று கொடுக்கவில்லை. அதை மூடி மறைத்துவிட்டது இந்த அரசு. எனவே மறைத்த காரணத்தினால் தான் இந்து ராம் அவர்கள், தன்னுடைய இந்து பத்திரிக்கையில் இந்த ஆதாரங்கள் அனைத்தையும் தொகுத்து விளக்கமாக கட்டுரை ஒன்றை எழுதி இருந்தார்கள். அந்த கட்டுரை வெளிவந்த அதற்குப் பிறகு இந்து ராம் மிரட்டப்பட்டார்.

 

நான் கேட்கின்றேன். ராகுல்காந்தி மன்னர் குடும்பத்தைச் சார்ந்தவர் என்று மோடி சொல்லுகின்றார். ராகுல் காந்தி அவர்கள் மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஏழைகளின் உள்ளம் அறிந்து மாதம் 6,000 ரூபாய் வருடத்திற்கு 72,000 ரூபாய் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் வழங்குவோம் என்று அறிவித்திருக்கின்றார். ஏழைகளுக்காக வறுமை ஒழிப்பு திட்டம் என்கின்ற பெயரில் அதை அவர் அறிவித்திருக்கிறார்.
 

மன்னர் குடும்பமாக இருந்தாலும் வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் போடப்படும் என்று அறிவித்திருக்கிறார். ராகுல் அவர்கள் மன்னர் குடும்பமாக இருந்தாலும் விவசாயிகளின் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றார்.
 

வாராக்கடன் கட்டமுடியாத விவசாயிகளுக்கு குற்றத்திலிருந்து இதில் விதிவிலக்கு வழங்கப்படும் அவர்கள் மீது குற்ற வழக்கு போடக்கூடாது அதையும் அவர் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கின்றார்.
 

ஆனால் டீ விற்று பிரதமராக வந்த நீங்கள் ஏழைகளைப் பற்றி நினைக்காமல், விஜய் மல்லையாவுக்கு லலித் மோடிக்கு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கொள்ளையடிக்க உதவி செய்யக்கூடிய வகையில் நீங்கள் ஈடுபடலாமா?
 

அதுமட்டுமல்ல இப்பொழுது எங்கு பார்த்தாலும் திடீர் திடீரென்று தன்னை ஒரு காவலாளி என்று சொல்லுகின்றார். ஆமாம், நீங்கள் காவலாளி தான். மோடியின் அந்த வார்த்தையை நான் முழுமனதோடு ஏற்றுக் கொள்கின்றேன்.
 

எதற்கு காவலாளி? மக்களுக்கா? இல்லை. எடப்பாடிக்கு காவலாளியாக இருக்கின்றீர்கள். எடப்பாடியின் ஆட்சிக்கு காவலாளியாக இருக்கின்றீர்கள். எனவே, நீங்கள் காவலாளி இல்லை களவாணி. பிரதமராக இருக்கக்கூடிய மோடி இன்றைக்கு களவாணியாக மாறி தமிழ்நாட்டில் நடக்கக்கூடிய அக்கிரமங்களுக்கு, ஊழல்களுக்கு, கரெப்சனுக்கு, கமிஷனுக்கு, கலெக்ஷனுக்கு. கொடநாட்டில் நடந்திருக்கக்கூடிய கொலை சம்பவத்திற்கு அதேபோல் பொள்ளாச்சியில் நடந்திருக்கக்கூடிய சம்பவத்திற்கு இந்த ஆட்சி காரணமாக இருந்திருக்கின்றது.
 

பொள்ளாச்சியில் நடந்திருக்கக் கூடிய ஒரு அக்கிரமத்திற்கு இந்த ஆட்சி காரணமாக இருக்கின்றது. இந்த அக்கிரம ஆட்சிக்கு நீங்கள் ஒரு களவாணியாக, காவலாளியாக இருந்து செயல்பட்டு கொண்டிருக்கின்றீர்களே தவிர வேறல்ல. எனவே, நான் மீண்டும் சொல்லுகின்றேன் தேர்தல் அறிக்கையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் நாம் மிகத் தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கின்றோம். இப்பொழுது நம்மை எதிர்த்து நிற்கக்கூடிய அணியில் புதிய புதிய கட்சிகள் எல்லாம் கூட்டணி சேர்ந்து இருப்பதைப் பார்க்கின்றோம்.

 


சேர்ந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள், சுய லாபத்திற்காக, கொள்கை ரீதியில் இல்லாமல் கொள்ளை அடிக்க போய் சேர்ந்து இருக்கின்றார்கள். ஆனால் இன்றைக்கு நாங்கள் சேர்ந்து இருக்கும் கூட்டணி தேர்தலுக்காக சேர்ந்த கூட்டணி அல்ல. தேர்தலுக்காக இன்றைக்கு சேர்ந்திருந்தாலும் ஆனால் ஏறக்குறைய மூன்று ஆண்டு காலமாக மக்களுடைய பிரச்னைகளுக்காக உங்களுக்காக உங்களுடைய நன்மைக்காக சேர்ந்து ஒரு தோழமை உணர்வுகொண்டு பல போராட்டங்களை நடத்தியிருக்கிறோம், மறியல் செய்திருக்கின்றோம், ஆர்ப்பாட்டங்கள் நடத்தி இருக்கின்றோம், சிறைக்குச் சென்று இருக்கின்றோம், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பல பிரச்னைகளை எடுத்துச்சொல்லி மக்களுக்காக வாதாடி இருக்கின்றோம். எனவே அந்த அடிப்படையில் அமைந்த கூட்டணி இந்தக் கூட்டணி. இவ்வாறு பேசினார். 

 

 

சார்ந்த செய்திகள்