சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த நாள் (ஏப்.17) விழாவினை முன்னிட்டு நேற்று சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை உருவச் சிலைக்கு தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதேபோல் அதிமுக சார்பிலும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் தீரன் சின்னமலை உருவச் சிலைக்கும் புகைப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உடன் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, செந்தில் பாலாஜி, செங்கோட்டையன், ஜெயக்குமார், செல்லூர் ராஜு, அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். பாமக கட்சியின் சார்பில் ஜி.கே. மணி, ஏ.கே.மூர்த்தி, கொங்கு வேளாளர் கட்சியின் சார்பில் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் மலர் தூவி, மரியாதை செலுத்தினர்.
அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “தெளிந்த நீரோடை போல் திறந்த புத்தகம் போல் வெளிப்படையாக தேர்தல் வேட்புமனுத் தாக்கலின் போது சொத்துப் பட்டியலை இணைத்துள்ளோம். யாருக்கு சொத்துள்ளது என்பதை இணையத்திலேயே பார்த்துக் கொள்ளலாம். இதில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. நேற்றும் சொன்னேன். அதற்கு முந்தைய நாளும் சொன்னேன். இருந்தால் கைப்பற்றுங்கள். சொத்துக்கள் இருந்தால் நடவடிக்கை எடுங்கள். இல்லை என்பதால்தான் இவ்வளவு பேசிக்கொண்டுள்ளோம். மடியில் கணம் இருந்தால் தான் பயப்பட வேண்டும். மடியில் கணம் இல்லாதபோது எதற்கு பயப்பட வேண்டும். தெளிவா சொல்றோம்; சத்தமா சொல்றோம்; போல்டா சொல்றோம் என்ன வேண்டுமானாலும் பண்ணுங்கள். நாங்கள் எதிர்கொள்கிறோம். அதிமுகவுடன் அண்ணாமலை விளையாட வேண்டாம். அதிமுகவோடு விளையாடுவது நெருப்புடன் மோதுவதற்கு சமம். தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் அதிமுக உள்ளது. அதிமுக தலைமையின் கீழ் தான் தமிழகத்தில் பாஜக உள்ளது" எனத் தெரிவித்தார்.