நாகர்கோவில் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட பிறகு முதல் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க உள்ளது. இது 52 வார்டுகளைக் கொண்டது. இதில் 2 லட்சத்து 44 ஆயிரத்து 531 வாக்காளர்கள் வாக்களிக்க இருக்கிறார்கள். மேயர் பதவிக்கு பொது வேட்பாளர்கள் என அறிவிக்கப்பட்டிருப்பதால் ஆண் வேட்பாளர்களை விட பெண்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். மும்முனை போட்டி நிலவும் இங்கு முக்கிய மூன்று கட்சிகளான திமுக, பாஜக, அதிமுக என மேயர் பதவியை கைப் பற்றுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், அ.தி.மு.க.வின் மாவட்டத் தலைமை நாகர்கோவில் மேயர் பதவியை தன் மகளுக்கு ஒதுக்க வேண்டும் என மாநில தலைமையிடம் கேட்டு கொண்டதன் பேரில் அதற்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனடிப்படையில் நாகர்கோவில் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசனின் மகள் ஸ்ரீலிஜாவை மேயர் வேட்பாளராக முன்னிறுத்தி 11-ம் வார்டில் போட்டியிடுவார் என அக்கட்சியின் எம்.எல்.ஏ. தளவாய்சுந்தரம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதை போல், பா.ஜ.க.வில் மீனாதேவ், மேயர் வேட்பாளராக அறிவிக்க விருப்பம் தெரிவித்து மாவட்டத் தலைமை, மாநில தலைமையிடம் கேட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மீனாதேவுக்கு 29-ம் வார்டில் போட்டியிடவும் அக்கட்சி வாய்ப்பு வழங்கியுள்ளது.
அதை போல் திமுகவில் மாநகர செயலாளர் வழக்கறிஞர் மகேஷ் மந்திரி மனோ தங்கராஜ் மூலம் கட்சியின் தலைமையிடம் நேரிடையாக பேசுவதற்கு முயற்சி செய்து வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் மாவட்ட செயலாளர் சுரேஷ் ராஜன் பெண் ஒருவருக்கு மேயர் பதவியை ஒதுக்க வேண்டும் என்று தலைமையிடம் பேசியுள்ளார். இதில் சுரேஷ்ராஜனின் கோரிக்கையை கட்சி தலைமை நிறைவேற்றும் என்றால் அதில் 7-ம் வார்டில் போட்டியிட இருக்கும் மேரி ஜெனட் விஜிலாவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் என்கின்றனர்.