இப்போது இல்லாவிட்டாலும் நாடாளுமன்ற தேர்தலோடு கண்டிப்பாக 18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடக்கும் என்பது உறுதியாகிவிட்டது. இதை மனதில் வைத்து இப்போதே கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தை தொடங்கிவிட்டார் டி.டி.வி. தினகரன்.
அண்மையில் பரமக்குடி மற்றும் தூத்துக்குடியில் ஆலோசனை நடத்திய அவர், " தாங்கள் ஆட்சிக்கு வந்தால் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்த தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாளை அரசு விழாவாக அனுசரிப்போம்." என்று வாக்குறுதி அளித்துள்ளார். அவரது இந்த பேச்சு முக்குலத்தோர் சமூக மக்களிடையே எதிர்ப்பு அலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் கர்ணன், அ.ம.மு.க. நிர்வாகியும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்கத் தமிழ் செல்வனிடம் தொலைபேசியில் பேசும் ஆடியோ சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், " தேவர் சமூகத்திற்கு எதிராகவே தினகரனின் செயல்பாடுகள் இருப்பதாக கூறுகிறார்.
கர்ணனின் பேச்சு இதோ, " முத்துராமலிங்க தேவரின் வரலாறு குறித்த பாடம் பள்ளிப் புத்தகத்தில் இருந்து நீக்கப்பட்டது. அப்போது கண்டனம் தெரிவிக்கவில்லை. தூத்துக்குடி அருகே பக்கப்பட்டியில் இரட்டைக் கொலை நடந்தது. அப்போதும் கண்டனம் தெரிவிக்கவில்லை. இதே சின்னம்மா, நடராஜன் அய்யா இருந்திருந்தால் இப்படி நடக்குமா? இவர் மட்டும் ஏன் இப்படி பண்ணுகிறார். அவங்க ஜாதி (தேவேந்திர குல வேளாளர்) ஓட்டு மட்டும் கிடைத்தால் இவரு ஜெயித்துவிட முடியுமா? எங்க ஓட்டு வேண்டாமா? எந்த அரசியல் தலைவரும் இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்திற்கு செல்வது கிடையாது. ஆனால், இவரு போறாரு ஏதோ அரசியலுக்கு போறார்னு ஏத்துக் கிட்டோம். இப்போ அரசு விழா எடுப்போம்னு ஏன் வாக்குறுதி கொடுக்கிறார். நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்த அனிதா வீட்டிற்கு போய் ஆறுதல் சொன்னார் ஏன் மூக்கையாத் தேவர் நினைவிடத்திற்கு மரியாதை செய்யவரவில்லை.." என இப்படியாக நீள்கிறது கர்ணனின் பேச்சு.
இதற்கு பதில் பேசும் தங்க தமிழ் செல்வனோ, " இம்மானுவேல் சேகரனுக்கு அரசு விழா நடத்துவோம்னு இவரு (தினகரன்) அனவுன்சு பண்ணியிருக்க கூடாது, ஆட்சிக்கு வந்தால் பார்ப்போமுன்னு சொல்லி இருக்கனும்'' என்கிறார்.
இடைத்தேர்தல் நடக்க உள்ள 18 தொகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி தோல்வியை தீர்மானிப்பவர்கள் தேவேந்திர குல சமூகத்தினர் என்கின்றது முந்தைய வரலாறு. இதை மனதில் வைத்தே தினகரன், இம்மானுவேல் சேகரனுக்கு விழா என்று அஸ்திரத்தை கையில் எடுத்திருக்கிறார். இது எதிர் தரப்பினரிடையே புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது என்பது தான் உண்மையே.!!