ஜெயலலிதாவின் மறைவையடுத்து ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிசாமி கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வந்த நிலையில், அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான பிரச்சனை பூதாகரமாக வெடிக்கத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும் பிரிந்தது. அதன் பிறகு பொதுக்குழு கூட்டப்பட்டு அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து அதிமுகவின் ஓ.பி.எஸ். அணியிலிருந்து சில நிர்வாகிகள் இ.பி.எஸ். அணிக்கு மாறினர்.
சமீபத்தில் நடந்து முடிந்த ஈரோடு இடைத்தேர்தலின்போது, அதிமுக ஓ.பி.எஸ். அணி சார்பிலிருந்து செந்தில் முருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால், இரட்டை இலை சின்னம் தொடர்பான விவகாரம் எழுந்ததும் செந்தில் முருகனை வாபஸ் பெற வைத்தார் ஒ.பி.எஸ். தொடர்ந்து இரட்டை இலை சின்னத்துடன் அதிமுக இ.பி.எஸ். அணி தேர்தலை சந்தித்தது. இதில், இ.பி.எஸ். அணி வேட்பாளர் தென்னரசு 43 ஆயிரத்து 923 ஓட்டுகளும் வாங்கி, 66 ஆயிரத்து 21 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றார். இதனைத் தொடர்ந்து இ.பி.எஸ். மீது ஓ.பி.எஸ். அணியினர் கடுமையான விமர்சனங்களை வைத்துவந்தனர்.
அதேசமயம், பாஜகவுடன் கூட்டணி தான் தோல்விக்கு காரணமென கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் தோல்வியின் போதும், இந்த இடைத்தேர்தல் தோல்வியின் போதும், அதிமுகவில் சிலர் விமர்சித்துப் பேசினர். அதனைத் தொடர்ந்து பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் சிலர் அடுத்தடுத்து அதிமுக இ.பி.எஸ். அணியில் இணைந்தனர். இதற்கு பாஜக தரப்பில் கடுமையான விமர்சனங்கள் எழ, இ.பி.எஸ். அணியினரும் கடுமையாகப் பதிலடி கொடுத்து வந்தனர். அதேபோல், இ.பி.எஸ். படத்தை பாஜகவினரும், அண்ணாமலை படத்தை அதிமுகவினரும் மாறி மாறி எரித்து தங்கள் அதிருப்தியையும், எதிர்ப்பையும் பதிவு செய்துவந்தனர். பிறகு நடந்த இ.பி.எஸ். அணி மா.செ. கூட்டத்தில், ‘பாஜகவினரின் விமர்சனங்களுக்கு அதிமுக தலைவர்கள் யாரும் உணர்ச்சிவயப்பட்டு பதில் அளிக்க வேண்டாம்’ என்று இ.பி.எஸ். கூறியதாக தகவல்கள் வெளியாகின. அதன்பிறகு அந்த வார்த்தைப் போர்கள் சற்றே ஓய்ந்தன.
இந்நிலையில், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா அக்கட்சியின் சார்பில் தமிழ்நாடு முழுக்க கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில், கோவில்பட்டி அடுத்த வி.புதூர் பகுதியில் நேற்று ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துகொண்டு பேசினார்.
அவர் பேசியபோது, “நீங்க டிரான்ஸ்ஃபர் வாங்கிட்டு அரசியலுக்கு டெப்பியுடேஷனில் வந்திருக்கிங்க. இன்னிக்கு பதவிமாற்றத்தில் வந்திருக்கிங்க. நாளைக்கு ஒருவேளை, ஆட்சி மாற்றம்லாம் வந்துட்டா, திரும்பி அந்த வேலைக்கு தான் போகணும். அரசியலுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம். நீங்க வந்துட்டீங்க, கூட்டணி கட்சி மதிக்கிறோம்” என்று பேசியுள்ளார். இந்தப் பேச்சில் அண்ணாமலையை அவர் ஒருமையில் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.