ஜெயலலிதா பாணியிலான முதல்வர் எடப்பாடியின் ஆவேசமான சட்டமன்றப் பேச்சு, பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி விசாரித்த போது, குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று குரல்கொடுத்த தி.மு.க. தரப்பிடம் ஏகத்துக்கும் ஆவேசத்தைக் காட்டிய எடப்பாடி, அந்த மசோதாவுக்கு எதிரான போராட்டத்தையும் கொச்சைப்படுத்தியதாக சொல்கின்றனர்.
மத்திய அரசு கொண்டுவரும் எல்லாத் திட்டத்தையும் கண்மூடித்தனமாக ஆதரிக்கிறீர்கள் என்று குற்றம் சாட்டிய தி.மு.க. உறுப்பினர் மனோ தங்கராஜிடம் கோபப்பட்ட முதல்வர் எடப்பாடி, குடியுரிமை சட்டத் திருத்தத்தால் யார் பாதிக்கப்பட்டிருக்காங்கன்னு சொல்லுங்க என்று ஆவேசமாக கூறினார். மேலும் அதற்கு நாங்கள் பதில் சொல்கிறோம் என்று தடாலடியாக பேசியதோடு, அவதூறான செய்தியைப் பரப்பி, அமைதியாக இருக்கும் தமிழ்நாட்டில் குந்தகம் ஏற்படும் நிலையை ஏற்படுத்தறாங்கன்னு சிறுபான்மை மக்கள் நடத்திவரும் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் அட்டாக் செய்தார்.
முதல்வரின் இந்த திடீர் அட்டாக்கை தி.மு.க. தரப்பு எதிர்பார்க்கவில்லை என்று சொல்லப்படுகிறது. அதோடு எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலினும் அப்போது அவையில் இல்லை. அந்தச் சட்டம் அமலுக்கு வந்தால் பாதிப்பு ஏற்படும் என்பதால்தான் இந்தப் போராட்டம் என்று முதல்வருக்கு பதிலடி கொடுக்க, தி.மு.க.வின் சீனியர்கள்கூட அப்ப முன்வராதது ஏன் என்று கேள்வி எழுந்தது. நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்களும் அதன் தோழமைக் கட்சி உறுப்பினர்களும் உடனுக்குடன் அதிரடியாக பா.ஜ.க. தரப்புக்கு எதிர்வினை ஆற்றும்போது, அதுபோன்ற வேகம் சட்டமன்றத்தில் ஏன் இல்லை என்கிற பேச்சும் பரவலாக எழுந்தது. 20-ந்தேதி இதுபற்றி சட்டமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், என்.பி.ஆர். என்கிற மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்பை கைவிட வேண்டும் என்றும் குடியுரிமை திருத்தச் சட்டமே அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் முதல்வருக்கு பதில் கொடுத்தார். ஆளுந்தரப்பிலிருந்து ஸ்டாலின் பேசுகின்ற போது நிறைய குறுக்கீடுகள் இருந்ததாக சொல்லப்படுகிறது. அறிவாலயத் தரப்போ, நாங்கள் வெளி நடப்பு செய்த நேரத்தில் சபைக்குள் ஆவேசப்பட்ட முதல்வரின் பேச்சை, மக்களே விமர்சனம் செய்து வருகிறார்கள் என்று சொல்கின்றனர்.