பாமகவில் 2017 மார்ச் மாதம் முதல் பாமக இளைஞர் சங்கச் செயலாளர் பதவி வகித்தவர் ராஜேஸ்வரி பிரியா. பாராளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்ததும், அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து அனைத்து மக்கள் அரசியல் கட்சியைத் தொடங்கினார். கடந்த பாராளுமன்றத் தேர்தலிலும் இக்கட்சி போட்டியிட்டது. இந்தநிலையில் வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தமிழகம் மற்றும் புதுவையில் இக்கட்சிக்கு கேஸ் சிலிண்டர் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
இதுகுறித்து ராஜேஸ்வரி பிரியா கூறுகையில், “மக்களின் அத்தியாவசியமான பொருள் எங்களின் கட்சி சின்னமாக கிடைத்தது, மக்களுக்கு அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் தேவை இன்றியமையாததாக மாறும் என்பதையே காட்டுகிறது. மேலும் கேஸ் சிலிண்டர் விலை ஏற்றத்தைக் கண்டித்து தமிழகத்தில் முதன்முறையாக ஆர்ப்பாட்டம் நடத்திய கட்சி என்ற முறையில் எங்களுக்கு இந்த கேஸ் சிலிண்டர் சின்னம் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கப்பட்டது எங்களுக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே பார்க்கிறோம். மக்களும் இதனை ஏற்றுக்கொண்டு அங்கீகரிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை” எனக் கூறியுள்ளார்.