முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எடப்பாடி சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும் 25 பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இரண்டு பணிகள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் அவற்றை துவக்கி வைத்தார். இதன் பின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “அரசு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் கடந்த அதிமுக ஆட்சியில் தமிழகம் அதலபாதாளத்திற்குச் சென்றுவிட்டதாகக் கூறியுள்ளார். தமிழகம் ஏற்றம் பெறவில்லை என்றும் கூறியுள்ளார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர் குலைந்துவிட்டது. தமிழகம் போதைப்பொருள் நிறைந்த மாநிலமாகத் திகழ்கிறது. 2100-க்கும் மேற்பட்டோர் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டிருந்தால் அத்தனை பேரையும் ஏன் கைது செய்யவில்லை. ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் இதில் ஈடுபட்டுள்ளதால்தான் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை.
மேலும், தமிழகம் அமைதிப்பூங்காவாக இருப்பதை பார்த்தால் சில பேருக்கு வயிறு எரிகிறது என்று முதல்வர் ஸ்டாலின் சொல்லியுள்ளார். யாருக்கு வயிறு எரிகிறது. மக்களுக்கு வயிறு எரிகிறது. மக்கள் கொந்தளித்து கோபத்தில் அவர்களுக்கு வயிறு எரியும் காட்சியை நாம் பார்க்கின்றோம். ஊடகங்களில் வரும் செய்திகளைத்தான் நாங்கள் கூறுகிறோம். அறிக்கையின் வாயிலாகத் தெரிவிக்கிறோம். முதல்வர் அதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல திட்டங்களைக் கொண்டு வந்தோம். அம்மா உப்பு, அம்மா மருந்தகம், அம்மா கிளினிக் எனப் பல திட்டங்களைக் கொண்டு வந்தோம். அது எல்லாமே கைவிட்டுட்டாங்க. ஏழைகளுக்கு பலன் அளிக்கும் திட்டங்கள் பலவற்றைக் கொண்டு வந்தோம். திமுக அரசு ஆட்சிக்கு வந்ததும் கைவிட்டுவிட்டது ” எனக் கூறினார்.