ஈரோடு மாவட்ட அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் கட்சிக்குள் கொதிநிலையை ஏற்படுத்தியிருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சம்மந்தி முறை என்கிற நெருங்கிய உறவினரான அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆதிக்கமே அரங்கேறியுள்ளது என ர.ர.க்கள் கொதிக்கிறார்கள்.
கருப்பணன் தனது அரசியல் எதிரியான முன்னாள் அமைச்சரும் பெருந்துறை தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ.வுமான தோப்பு வெங்கடாசலத்தை ஒதுக்கிவிட்டு தனது விசுவாசியான ஜே.கே. என்கிற ஜெயக்குமாரை வேட்பாளராக அறிவிக்க வைத்திருக்கிறார். அதேபோல், அந்தியூர் தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ. ராஜா கிருஷ்ணனுக்குப் பதிலாக, தனது ஆதரவாளரான சண்முகவேல் என்பவரையும், பவானிசாகர் (தனி) தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ. ஈஸ்வரனுக்குப் பதிலாக தனது ஆதரவாளரான டாஸ்மாக் ஊழியர் பன்னாரி என்பவரையும் வேட்பாளராக அறிவிக்க வைத்துவிட்டார். தென்னரசுவுக்கு சீட் இல்லாமல் கூட்டணிக் கட்சியான த.மா.கா.வுக்கு ஒதுக்க வைத்ததோடு, தோப்பு வெங்கடாசலத்திற்கு நெருக்கமாக இருந்த மொடக்குறிச்சி சிட்டிங் எம்.எல்.ஏ. சிவசுப்பிரமணிக்கு சீட் இல்லாமல் இந்த தொகுதியையும் கூட்டணிக் கட்சியான பா.ஜ.க.வுக்கு போகவைத்துவிட்டார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள எட்டுத் தொகுதிகளில் இரண்டை கூட்டணிக்குத் தள்ளிவிட்டு சிட்டிங் எம்.எல்.ஏ.க்களாக உள்ள தனது எதிரிகள் ஐந்து பேரை அ.தி.மு.க. அரசியலிருந்தே அப்புறப்படுத்திவிட்டார் அமைச்சர் கருப்பணன் என ஈரோடு அ.தி.மு.க. வட்டாரம் பேசிவருகிறது.