ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஈரோடு பஸ் நிலையத்தை நவீன முறையில் புணரமைப்பதற்காக ரூபாய் 14.70 கோடியும், அதைப்போல் பஸ் நிலையத்தைச் சுற்றிலும் அபிவிருத்தி செய்யும் பணிகளுக்காக ரூபாய். 9.30 கோடியும், பஸ் நிலையத்தில் சிற்றுந்துகள் நிறுவதற்கு கூடுதல் கட்டடம் கட்டுவதற்காக ரூபாய். 5.50 கோடி என மொத்தம் ரூபாய். 29.50 கோடி மதிப்பில் விரிவாக்கம் செய்யும் பணிக்கான பூமி பூஜை, கடந்த 25 ம் தேதி ஈரோடு பஸ் நிலையத்தில் நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு முன்னிலை வகித்தார். அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "சில பள்ளிகளில் கரோனோ தாக்கம் உள்ளதாக வந்துள்ள செய்திகள் தவறு. இரண்டு ஆசிரியர்களுக்கு மட்டும் சோதனை எடுத்துள்ளனர். மேலும் ஆசிரியர்களுக்கு ஆய்வு செய்து வருகின்றனர்.
கடந்த ஆண்டுகளில் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் காலங்களில் படிப்படியாக பணிகள் வழங்கப்படும். உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி, காலிப்பணியிடங்களை விட தேர்வானவர்கள் கூடுதலாக இருக்கும் பட்சத்தில் தேர்வாணையத்தின் மூலம் அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். கரோனோ தடுப்பு ஊசி முதற்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்குப் போடப்பட்ட பிறகு அனைத்து துறையைச் சேர்ந்தவர்களுக்கும் போடப்படும்.
உடற்கல்வி ஆசிரியர்களைப் பொறுத்தவரையில் இதுவரை பணி நியமணம் செய்யப்பட்டவர்கள் பணியில் சேர்ந்து விட்டனர். புதிதாக உள்ளவர்களுக்கு இந்த மாதம் இறுதிக்குள் ஒரு அட்டவணை வெளியிட உள்ளோம் அதன்படி எந்த அளவு பணியிடங்கள் உள்ளதோ அதற்கேற்ப பணியிடங்கள் நிரப்படும். பிப்ரவரி மாதம் முதல் 9ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்புகள் திறப்பது குறித்து எல்லாவற்றையும் தமிழக முதல்வர்தான் முடிவு செய்வார்" என்றார்.