தமிழகமே உற்று நோக்கிய ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு காலை சரியாக 7 மணிக்கு தொடங்கியது. ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 2,27,547 வாக்காளர்களில் 1,11,025 ஆண் வாக்காளர்களும், 1,16,497 பெண் வாக்காளர்களும், 25 திருநங்கை வாக்காளர்களும் உள்ளனர்.
இந்தத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இந்த நிலையில் மொத்தம் உள்ள 238 வாக்குச் சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது. வாக்காளர்களும் ஆர்வமுடன் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வந்தனர்.
இந்நிலையில் மாலை 6 மணியளவில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்தது. மாலை 5 மணி நிலவரப்படி 70.58% வாக்குகள் பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 மணியளவில் வாக்குப்பதிவு முடிவடைந்தாலும் டோக்கன்களைப் பெற்று வரிசையில் நிற்பவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். வாக்களிக்க யாரும் இல்லாத நிலையில் வாக்குச் சாவடிகளில் உள்ள மின்னனு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி நடந்தது.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஈரோடு தேர்தல் அதிகாரி சிவகுமார், “ஈரோடு கிழக்கில் 7 மணி நிலவரப்படி 74.69% வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆண்கள் 82 ஆயிரத்து 21 பேரும் பெண்கள் 87 ஆயிரத்து 97 பேரும் திருநங்கைகள் 17 பேரும் என மொத்தம் 1 லட்சத்து 69 ஆயிரத்து 945 பேர் வாக்களித்துள்ளனர். தேர்தல் தொடர்பாக நேற்று இரவு ஒரு மணிக்கு ஒரு வழக்கு போட்டுள்ளோம். அதைத் தாண்டி எந்த வழக்கும் இல்லை” எனக் கூறினார். ஈரோடு கிழக்கில் மொத்தமாக 74.79% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதில் ஆண்கள் 82,138 பேரும் பெண்கள் 88,037 பேரும் திருநங்கைகள் 17 பேரும் வாக்களித்துள்ளனர். மார்ச் 2 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் நிலையில் வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.