ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் முறைகேடு நடைபெறுகிறது என்று கூறி தேர்தலுக்கு தடைகோரிய மனு மீதான விசாரணையில் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறும் என கடந்த மாதம் 18 ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. இடைத்தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் முதன்மைக் கட்சிகள் தங்கள் வேட்பாளரை அறிவித்து சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், சுயேட்சை வேட்பாளர்களும் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவனுக்காக கூட்டணிக் கட்சிகளான திமுக, விசிக போன்றவை களத்தில் இறங்கி தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றன. அதேபோல், அதிமுக வேட்பாளர் தென்னரசுவிற்கு ஆதரவாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கூட்டணிக் கட்சிகளான தமாகா, பாஜகவும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு தடை கோரி மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். மேலும், தேர்தல் முறைகேடு தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடப்பட்டு இருந்தது. இது குறித்து விசாரித்த நீதிபதி வேறு ஒரு வழக்கில் இதே நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக கூறி மனுவை தள்ளுபடி செய்தது.