கரோனா பாதிப்புள்ள முழு மாவட்டத்தையும் சிவப்பு மண்டலமாக கருதாமல் பாதிக்கப்பட்ட பகுதிகளை மட்டும் சிவப்பு மண்டலமாக கருதி பாதுகாப்பு அளிக்க வேண்டும். சிவப்பு மண்டல மாவட்டங்களிலும் பாதிக்காத பகுதிகளில் பொருளாதார நடவடிக்கைகளை கட்டுப்பாடுகளோடு மேற்கொள்ள வேண்டும். பாதிப்பு இல்லாத பகுதிகளில் ஊரடங்கை தளர்த்தி தொழிற்சாலைகளை இயங்க அனுமதிக்க வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அரசினுடைய கவனம் நோய் பாதுகாப்போடு சேர்த்து பொருளாதார சீரழிவு பக்கமும் திரும்பியிருக்கிறது. 40 நாட்களாக ஊரடங்கு உத்தரவினால் மத்திய மாநில அரசுகளின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு வீட்டிலேயே அடங்கிக் கிடக்கும் மக்களுடைய வாழ்வாதாரம் கவலைக்குரியதாக மாறி இருக்கிறது.
மத்திய மாநில அரசுகளும் இதை உணர்ந்து ஊரடங்கை தளர்த்துவதற்கான முயற்சிகளில் கவனத்தை திருப்பி இருக்கிறது. கரோனா வைரஸ் பாதிப்புக்கான மருந்துகளை உலகம் தயாரிக்கின்ற வரை நிரந்தர தீர்வு கிடையாது. இதை எதிர்த்து போரிடுவதை தவிர வேறு வழி இல்லை.
ஊரடங்கை பயன்படுத்தி மாநில அரசுகள் தேவையான தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனைகளை உருவாக்கியிருக்கிறார்கள். தேவையான வென்டிலேட்டர் கருவிகளையும் தயார்படுத்தி இருக்கிறார்கள். தேவையான அளவு கரோனா பரிசோதனை நடைபெறவில்லை என்றாலும் பரிசோதனை எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டிருப்பது உண்மை. இந்த சூழ்நிலையில் ஊரடங்கை தளர்த்தி கரோனா கிருமிகளை எதிர் கொண்டு எதிர்ப்பு சக்திகளை உடம்பில் உருவாக்குவது தான் தீர்வாக இருக்கும்.
தமிழகத்தில் பொருளாதார நடவடிக்கைகளுக்கு அனுமதியை கொடுத்து ஏழை மக்களின் வருமானத்திற்கு வழி செய்யக்கூடிய முயற்சிகள் வேகப்படுத்தப்பட வேண்டும். மத்திய அரசு அறிவித்தது போல 22 மாவட்டங்களை முழுமையாக சிவப்பு மண்டலத்தில் வைத்துவிட்டு எந்த பொருளாதார நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது.
தொழிற்சாலையோ, வியாபாரமோ குறிப்பிட்ட மாவட்டத்திற்குள் மட்டும் துவக்கி நடத்த முடியாது. பக்கத்து மாவட்டத்தினுடைய தேவை ஒவ்வொரு நடவடிக்கைக்கும் இருக்கிறது. ஒரு மாவட்டத்தின் தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் வேறு மாவட்டங்களில் இருந்து வருவார்கள். அதேபோல ஒரு பெரிய தொழிற்சாலைக்கு மூலப்பொருட்கள் கொடுக்கின்ற தொழிற்சாலைகள் வேறு மாவட்டத்தில் இருப்பார்கள்.
சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் போன்ற அனைத்து மாவட்டங்களையும் முழுமையாக மூடிவிட்டு தமிழகத்தின் பொருளாதார நடவடிக்கைகள் மேற்கொள்ள வாய்ப்பு இல்லை. ஒரு சில இடங்களில் கரோனா பாதிப்பு இருக்கிறது என்பதற்காக முழு மாவட்டத்தையும் சிவப்பு மண்டலம் என்று கருதுவது தவிர்க்கப்படலாம். ஒரு மாவட்டத்தில் எங்கெங்கு பாதிப்பு இருக்கிறதோ அந்தப் பகுதிகளை மட்டும் தவிர்த்து மீதி இருக்கும் பகுதிகளுக்கு ஊரடங்கை தளர்த்த வேண்டும்.
ஹரியானா போன்ற பல மாநிலங்களில் இந்த வகையில் நடைமுறைப்படுத்தி இருக்கிறார்கள். இதுதான் சாத்தியம். சிவப்பு மண்டலமாக இருந்தாலும் பாதிப்பு இல்லாத பகுதிகளில் ஊரடங்கை தளர்த்தி தொழிற்சாலைகளை கட்டுப்பாடுகளோடு இயங்க அனுமதிக்க வேண்டும். பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் பரிசோதனை தாமதமில்லாமல் முழுமையாக செய்யப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் பரிசோதனையும் செய்யாமல் மக்கள் வீடுகளில் தொடர்ந்து முடக்கப்படுவதால் அமைதி இழக்கிறார்கள். எல்லாவற்றையும் பரிசீலித்து பாதுகாப்பான பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.