Skip to main content

“கட்சிக்கு எதிராக நீதிமன்றம் சென்றாலே அடிப்படை உறுப்பினர் பதவிகள் பறிக்கப்படும்..” - இ.பி.எஸ். தரப்பு வாதம் 

Published on 19/03/2023 | Edited on 19/03/2023

 

E.P.S. side argument in Chennai High Court

 

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான தேதி கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டு, நேற்று சனிக்கிழமை இ.பி.எஸ். மனுத் தாக்கல் செய்துள்ளார். இ.பி.எஸ். மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால், இன்று வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததும் அவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவார் என சொல்லப்பட்டுவந்தது. இந்நிலையில், நேற்று சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி முன்னிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், ஆர்.வைத்திலிங்கம் ஆகிய மூன்று பேரும் தனித்தனியாக வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். சார்பில் ‘அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்’ என முறையீடு செய்யப்பட்டது. 

 

இதனையடுத்து, பொறுப்பு நீதிபதி இந்த வழக்கை நீதிபதி குமரேஷ் பாபு விசாரிக்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து நீதிபதி குமரேஷ் பாபு முன்னிலையில் முறையீடு செய்யப்பட்டது. அதனையேற்ற நீதிபதி குமரேஷ் பாபு இன்று காலை அவசர வழக்காக ஏற்று விசாரிப்பதாகத் தெரிவித்தார். 

 

முன்னதாக அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தேதியை இ.பி.எஸ். அறிவித்து, நேற்று முதல் ஆளாய் வேட்புமனுவைத் தாக்கல் செய்ததும், ஓ.பி.எஸ். அணி சார்பில் பண்ருட்டி ராமச்சந்திரன், ஓ.பி.எஸ். ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அதனைத் தொடர்ந்து ஓ.பி.எஸ்., ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ளதை சுட்டிக் காட்டி, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை அறிவித்தது செல்லாது என அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து தலைமை தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதினார். 

 

அதேசமயம், எடப்பாடி பழனிசாமி தனது அணியின் மூத்த தலைவர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில், நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ். தரப்பு தாக்கல் செய்துள்ள வழக்கை எப்படி எதிர் கொள்வது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

 

“பண்ருட்டி ராமச்சந்திரன் அரசியலில் சகுனி..” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

 

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி குமரேஷ் பாபு முன்னிலையில் இன்று காலை வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில், ஓ.பி.எஸ். ஆதரவாளர்களுக்காக மூத்த வழக்கறிஞர்கள் பி.எஸ். ராமன், ஸ்ரீராம், மணிசங்கர் ஆகியோ ஆஜராகியுள்ளனர். இ.பி.எஸ். தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் வைத்தியநாதன், விஜயநாராயண் ஆகியோர் ஆஜராகியுள்ளனர். 

 

எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன் வாதிடும்போது, ஒன்றரை கோடி தொண்டர்களில் ஒரு சதவீதம் ஆதரவு கூட ஓ.பன்னீர்செல்வத்திற்கு இல்லை. பொதுச்செயலாளர் தேர்தல் ஒன்றரை கோடி உறுப்பினர்கள் மூலமே நடத்தப்படுகிறது. தேர்தல் நடவடிக்கைகள் துவங்கிவிட்டதால் நீதிமன்றம் தலையிட முடியாது. இது தீர்மானிக்கப்பட்ட ஒன்று. ஓ.பன்னீர்செல்வம் நேரடியாக இந்த வழக்கை தொடர்வில்லை. மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகரன் ஆகியோருக்கு வழக்கு தொடர அடிப்படை உரிமை இல்லை. இவர்கள் மூவரும் மறைமுக மனுதாரர்களாக உள்ளனர். 

 

உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. தேர்தல் பணி தொடங்கிவிட்டால் தடை விதிக்க முடியாது என தெளிவாக பல தீர்ப்புகளில் கூறப்பட்டுள்ளது. கட்சியிலிருந்து நீக்கப்பட்டு எட்டு மாதங்கள் கழித்து வழக்கு தொடர்ந்துள்ளனர். உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தபோது பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படாது என எங்கள் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு முடிவுக்கு வந்த பின் அந்த உத்தரவாதம் அமலில் இல்லை. 

 

பொதுச்செயலாளர் தேர்தல்; ஓ.பி.எஸ். தரப்பில் என்ன வாதிடப்பட்டது?

 

ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பு மனுக்கள் இருந்தால் தேர்தல் கட்டாயம் நடைபெறும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலும் இதேபோல்தான் வார இறுதியில் மூன்று நாட்கள் நடத்தப்பட்டது. பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதாகக் கூறி பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கேட்க முடியாது. பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட்டால்தான் கட்சி பிரச்சனைகளை கையாள முடியும். 

 

பொதுக்குழு வழக்கில் உயர்நீதிமன்ற தனிநீதிபதி வழங்கிய தீர்ப்பு எப்படி தவறானது என்பதை உச்சநீதிமன்றம் தெளிவாக விளக்கியுள்ளது. அடிப்படை உறுப்பினர்கள் அனைவருமே ஒற்றை தலைமைதான் வேண்டும் என வலியுறுத்தினார்கள். ஜூலை 11 பொதுக்குழுவில் 2,600க்கும் அதிகமான உறுப்பினர்களில் 2,100க்கும் அதிகமானோரின் ஒப்புதலுடன் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் அதில், ஒன்றரை கோடி அடிப்படை உறுப்பினர்களின் விருப்பப்படி ஒற்றை தலைமை உள்ளிட்ட தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

 

ஓ.பி.எஸ். தரப்பில் ஒரே வாதத்தையே திரும்ப திரும்ப முன்வைக்கிறார்கள். கட்சியின் எதிர்காலத்தை கருதியே பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படுகிறது. அதிமுகவில் பொதுக்குழுதான் அதிகாரம் பெற்ற அமைப்பு. அடிப்படை உறுப்பினர்களால்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் எனக்கூறும் ஓ.பி.எஸ். இப்போது ஏன் தேர்தலை தடுக்க முயற்சிக்கிறார். யதார்த்த நிலையை ஓ.பி.எஸ். தரப்பினர் உணரவில்லை. கட்சிக்கு எதிராக நீதிமன்றம் சென்றாலே கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகள் பறிக்கப்படும் என விதிகள் உள்ளன என்று வாதிட்டார். 

 

 

சார்ந்த செய்திகள்