Skip to main content

ஊழலில் அண்ணா பல்கலைக்கழகம்...  எடப்பாடிக்கு சென்ற லிஸ்ட்...  அமைதியான அதிமுக அமைச்சர்!

Published on 26/03/2020 | Edited on 26/03/2020

ஊழல்களில் சிக்கித் திணறும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் 135 பேரின் பதவியைப் பறிக்கவேண்டும் என அரசுக்கு பரிந்துரைத்துள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி அனந்தகுமார் கமிட்டியின் அறிக்கை உயர்கல்வித்துறைக்கு தலைவலியை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. பேராசிரியர் நியமன ஊழல்களுக்குக் காரணமான முன்னாள் துணைவேந்தர்களைக் கைது செய்யவேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், துணைவேந்தராக மன்னர் ஜவஹர் இருந்த காலத்தில் நடந்துள்ள பல முறைகேடுகளும் தற்போது விஸ்வரூபம் எடுக்கின்றன.

 

admk



இதுகுறித்து நம்மிடம் பேசிய பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், "அண்ணா பல்கலைக்கழகம் நிர்வாக வசதிக்காக சென்னை, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை என கலைஞர் ஆட்சியின் போது (2007) ஐந்தாகப் பிரிக்கப்பட்டது. இதற்காக 5 துணைவேந்தர்களும் நியமிக்கப்பட்டார்கள். பல்கலைக்கழகத்தில் எழுந்த ஊழல் புகார்களால், பிரிக்கப்பட்ட பல்கலைக்கழக நிர்வாகத்தை முந்தைய ஜெயலலிதா ஆட்சியின் (2012) போது மீண்டும் ஒன்றிணைத்தனர்.

இப்படி இணைக்கும்போது பேராசிரியர்கள், ஊழியர்கள் என பலரும் நியமிக்கப்பட்டார்கள். அந்த நியமனங்களில் பல்வேறு ஊழல்கள் நடந்திருப்பதாக பலதரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், ஐ.ஏ.எஸ். அதிகாரி அனந்தகுமார் தலைமையில் 2017-ல் ஒரு கமிட்டியை அமைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. உடனடியாக விசாரணையைத் துவக்கிய கமிட்டி, 2012-ல் நடந்த நியமனங்களில் விதிமீறல்கள் உட்பட பல்வேறு ஊழல்கள் நடந்திருப்பதைக் கண்டுபிடித்தது. பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனங்களில் 135 பேர் ’தகுதியற்றவர்கள்’எனப் பதிவு செய்திருக்கிறது கமிட்டி. தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் பல்வேறு உறுப்புக் கல்லூரிகளிலும் அந்த 135 பேரும் பணிபுரிந்து வரும் நிலையில், அவர்களை பதவியிலிருந்து நீக்கவும் வலியுறுத்தியிருந்தார் அனந்தகுமார்.

 

admk



அண்ணா பல்கலைக்கழகம் ஒன்றிணைந்தபோது சென்னையில் மன்னர்ஜவஹர், கோவையில் ராதாகிருஷ்ணன், திருச்சியில் ராமச்சந்திரன், நெல்லையில் காளியப்பன், மதுரையில் தேவதாஸ் ஆகியோர் துணைவேந்தர்களாக இருந்தனர். இவர்கள்தான் தகுதியற்ற 135 பேரையும் நியமித்தனர். பேராசிரியர் நியமனங்கள் கோடிகளிலும், ஊழியர் நியமனங்கள் லட்சங்களிலும் நடந்தன.

இதுபற்றிய கமிட்டியின் அறிக்கையை கடந்த 2018-ல் எடப்பாடி அரசிடம் ஒப்படைத்தார் அனந்தகுமார். ஆனால், அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு 2 வருடங்களாகியும் எந்த நடவடிக்கையும் இல்லை. அதேசமயம், தற்போதைய துணைவேந்தர் சூரப்பா தலைமையில் நடந்த சிண்டிகேட் கூட்டத்தில், அனந்தகுமார் கமிட்டியின் பரிந்துரைகளை நிராகரிக்கலாம் என முடிவு செய்திருக்கிறார்கள். இதனையறிந்து கொந்தளித்த கல்வியாளர்கள் பலரும், "ஊழல் பேராசிரியர்களைப் பதவியிலிருந்து நீக்கு; அனந்தகுமார் கமிட்டியின் அறிக்கையை அமல்படுத்து' என்கிற கோஷத்தை முன்னிறுத்தி தமிழக கவர்னர் புரோகித்துக்கும் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனுக்கும் புகார் மனு அனுப்பியுள்ளனர். ஊழல் பேராசிரியர்களுக்கு கல்தா கொடுப்பதுடன் அவர்கள் மீதும் அவர்களை நியமனம் செய்த துணைவேந்தர்கள் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்பட வேண்டும். அப்போதுதான் இனிவரும் காலங்களில் துணைவேந்தர்கள் ஊழல் செய்யாமல் இருப்பார்கள்''‘என்கின்றனர்.


இந்த ஊழல் விவகாரங்கள் பெரிதாக வெடித்துள்ள நிலையில், 2008-ல் நடந்த மற்றொரு நியமன ஊழலும் பூதாகரமாகி வருகிறது. இது குறித்து நம்மிடம் பேசிய உயர்கல்வித்துறை அதிகாரிகள், "மன்னர் ஜவஹர் துணைவேந்தராக இருந்தபோது, தற்காலிக விரிவுரையாளர்களாக இருந்த 98 பேரை கடந்த 2008-ல் நிரந்தரப் பணியாளர்களாக நியமித்தார் மன்னர் ஜவஹர். இந்த நியமனங்களுக்கு வெளிப்படையான அறிவிப்போ, விளம்பரங்களோ மன்னர் ஜவஹர் செய்யவில்லை. அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சிலின் விதிகளும், பல்கலைக்கழக மானிய குழுவின் விதிமுறைகளும் இதில் மீறப்பட்டுள்ளன. சுழற்சி முறை இடஒதுக்கீடும் பின்பற்றவில்லை. நேர்காணல் மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பும் நடக்கவில்லை.

ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்த மிக மிக தகுதி குறைவானவர்களும் விரிவுரையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த முறைகேடுகளில் சுமார் 25 கோடி ரூபாய் லஞ்ச பணமாக விளையாடியது. எம்.ஐ.டி. கல்லூரியின் எலெக்ட்ரானிக்ஸ் துறையைச் சேர்ந்த பிரகாஷ், மணிகண்டன் ஆகிய இருவரையும் தனது பிரதான புரோக்கர்களாக வைத்திருந்தார் மன்னர் ஜவஹர். இதில் மணிகண்டன், மன்னர் ஜவஹரின் நேரடி உதவியாளர். அனந்தகுமார் கமிட்டியின் அறிக்கையைத் தொடர்ந்து தற்போது இந்த நியமன ஊழல்களும் கிளம்பியுள்ளன. இதற்கான ஆதாரங்களை ராஜ்பவனுக்கும் அரசுக்கும் அனுப்பியபடி இருக்கிறார்கள் பேராசிரியர்கள். ஆனால், நடவடிக்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய அமைச்சர் அன்பழகனும், நடவடிக்கை எடுக்க வேண்டிய துணைவேந்தர் சூரப்பாவும் மௌனமாகவே இருக்கிறார்கள். இந்த விவகாரம் விரைவில் நீதிமன்றங்களில் வெடிக்கவிருக்கிறது''‘என்கின்றனர்.

இதுகுறித்து மன்னர் ஜவஹரிடம் கேட்ட போது, "என் பணிக்காலத்தில் எந்த நியமனங்களிலும் விதிமீறல் கிடையாது. ரிசர்வேஷன், ரோஸ்டர் உள்ளிட்ட அனைத்து விதிகளும் பின்பற்றப்பட்டே நியமனங்கள் நடந்தன. அதற்கு சிண்டிகேட்டும் ஒப்புதல் தந்திருக்கிறது'' என்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்