Skip to main content

“மீனவர்கள் படும் இன்னல்களுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்” - மத்திய அரசுக்கு இ.பி.எஸ் கண்டனம்

Published on 09/08/2024 | Edited on 09/08/2024
 EPS condemns central government to tamil fishermen

தமிழக மீனவர்கள் கைதை தடுக்க மத்திய பா.ஜ.க அரசு நிரந்தர தீர்வு காண முயற்சி எடுக்காதது கண்டனத்துக்குரியது என அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி  கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது, “வங்கக்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்கள், 4 நாட்டுப் படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து அராஜக முறையில் சிறைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், மத்திய பாஜக அரசு இதற்கான நிரந்தரத் தீர்வினை எட்ட போதிய முயற்சிகள் எடுக்காமல் இருப்பதும், மாநில அரசு போதிய அழுத்தம் கொடுக்காமல் இருப்பதும் கடும் கண்டனத்திற்குரியது.

சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்தம் உடைமைகளையும் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுப்பதுடன், கச்சத்தீவு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து தேர்தல் நேரத்தில் மட்டும் பேசுவதோடு நில்லாமல், தமிழ்நாட்டின் மீனவர்களும் இந்தியர்கள் தான் என்பதை மனதிற்கொண்டு, இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்கள் படும் இன்னல்களுக்கெல்லாம் நிரந்தர தீர்வை எட்டுமாறு மத்திய பா.ஜ.க அரசை வலியுறுத்துகிறேன். மேலும், மாநிலத்தில் ஆட்சியையும் நாற்பது எம்பிக்களை வைத்துக்கொண்டு வழக்கம் போல கும்பகர்ண தூக்கத்தில் இல்லாமல், இப்பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்திலும் மத்திய அரசிடமும் உரிய அழுத்தத்தை அளிக்குமாறு தி.மு.க முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்