நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.
அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளின் மக்களவைத் தேர்தல் பரப்புரை இன்றுடன் (17.04.2024) நிறைவு பெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், “அதிமுகவை அழிக்க இதுவரை யாரும் பிறக்கவில்லை. பொன்விழா கண்ட கட்சி அதிமுக. கடந்த 30 ஆண்டு காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்திருக்கிறோம். எனவே இப்படிப்பட்ட கட்சியை அழிப்பது என்பது வெறும் கனவாகத் தான் முடியும். வெற்று வார்த்தையாகத் தான் முடியும். கடந்த சட்டமன்ற தேர்தலின்போது திமுக, அளித்த வாக்குறுதிகளை இதுவரை முழுமையாக நிறைவேற்றவில்லை. அதாவது சுமார் 10 சதவீதத்திற்கும் குறைவான வாக்குறுதிகள் மட்டும் தான் நிறைவேற்றப்பட்டுள்ளன. தேர்தல் வாக்குறுதிகளில் 98% நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பச்சை பொய் பேசுகிறார்.
திமுக ஆட்சியில் நிர்வாகத் திறமையின்மை காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. அதே போன்று கடந்த 2019 மக்களவைத் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை மத்திய பாஜக அரசு நிறைவேற்றவில்லை. 2014க்கு முன்பு கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. இப்போது கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. பெட்ரோல், டீசல் மீது அதிகமான வரியை போட்டு மக்கள் மீது சுமையை ஏற்றியுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.
மத்திய அமைச்சர்கள் பிரச்சாரத்துக்கு மட்டுமே தமிழ்நாட்டிற்கு வருகின்றனர். மாநில பிரச்சனைகள் குறித்து யாரும் பேசுவதில்லை. மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நிதியை மத்திய பாஜக அரசு முழுமையாக வழங்குவதில்லை. பாஜக ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தும் திட்டங்களை 10 ஆண்டுகளாக தமிழகத்திற்கு தரவில்லை. இயற்கைச் சீற்றங்களின்போது கேட்கப்படும் நிதியை மத்திய பாஜக அரசு முறையாக வழங்குவதில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. தேர்தல் முடிவுகளில் இழுபறி என வந்தால் யாருக்கு ஆதரவு என்பதை அந்த நேரத்தில் தெரிவிப்போம். உச்சநீதிமன்ற உத்தரவையே மதிக்காத தேசியக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து என்ன பயன்” எனக் கேள்வி எழுப்பினார்.