Published on 27/09/2019 | Edited on 27/09/2019
தமிழகம் மற்றும் புதுச்சேரியில்உள்ள காலியாக உள்ள சட்ட மன்ற தொகுதிக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்தது அதிமுக தலைமை கழகம். அதன்படி விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் எம். முத்தமிழ்ச்செல்வன் போட்டியிடுவார் எனவும், நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் ரெட்டியார்பட்டி வெ.நாராயணன் போட்டியிடுவார் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது. இதில் விக்கிரவாண்டி தொகுதிக்கு தேர்தல் பணியில் அதிமுக சார்பாக அமைச்சர் சி.வி.சண்முகத்தை அதிமுக தலைமை நியமித்துள்ளது.
விக்கிரவாண்டி தொகுதியில் வன்னியர் வாக்குகள் அதிகம் இருப்பதால் பாமக கட்சியின் ஆதரவை அதிகம் எதிர்பார்த்து அதிமுக உள்ளது. ஏற்கனவே பாமக கட்சி தலைமைக்கும், அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கும் சில சிக்கல் இருப்பதால் அவர்களுடன் தேர்தல் பணியில் அமைச்சர் ஈடுபடுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால் பாமக நிர்வாகிகளை தனியாக சந்தித்து அவர்களுக்கு வேண்டியதை செய்ய எடப்பாடி முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதோடு பாமக கட்சிக்கு செல்வாக்கு இருப்பது போல் விசிக கட்சிக்கும் செல்வாக்கு இருப்பதால், பாமக கட்சி வாக்கினை முழுவதும் பெற வேண்டிய கட்டாயத்தில் அதிமுக உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் பாமக நிர்வாகிகளுடன், அமைச்சரை அனுசரித்து தேர்தல் பணியை மேற்கொள்ள எடப்பாடி உத்தரவு போட்டதாக கூறுகின்றனர் .