
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுகவில் தென்னரசு போட்டியிடுகிறார். இது தவிர நாம் தமிழர் கட்சியில் மேனகா, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் ஆனந்த் உட்பட மொத்தம் 80 பேர் களத்தில் உள்ளார்கள்.
ஈரோடு தெருக்களில் அமைச்சர்கள், திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏக்கள் என ஒவ்வொரு வீதிகளிலும் சுற்றி சுற்றி வருகிறார்கள். இதில் கருங்கல்பாளையம் என்ற பகுதியில் தேர்தல் பொறுப்பாளராக உள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு தனது தேர்தல் பணிகளை செய்து வருகிறார். குறிப்பாக அந்த பகுதியில் உள்ள வாக்காளர்கள், வெளியூர் சென்ற வாக்காளர்கள் என அவர்கள் எந்த ஊர்? எங்கே குடியிருக்கிறார்கள்? என்பதை நுணுக்கமான பட்டியலோடு எடுத்து அவர்களை நேரில் சந்தித்து திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கை சின்னத்தில் வாக்கு கேட்டு வருகிறார்.

இந்த நிலையில், அமைச்சர் தங்கம் தென்னரசு பொறுப்பில் உள்ள கருங்கல்பாளையம் பகுதியில் சுமார் 7,000 வாக்குகள் வட மாநிலத்தவர்கள் வாக்குகளாக உள்ளது. பொதுவாக வடமாநிலத்தவர்கள் பாஜக ஆதரவு நிலையைக் கொண்டவர்கள். அவர்களின் வாக்குகளை திமுக கூட்டணிக்கு கொண்டுவர அந்த பகுதியில் உள்ள 40வது வார்டு திமுக கவுன்சிலர் வழக்கறிஞர் ரமேஷ் குமார் அவர்களோடு கலந்து ஆலோசித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, வட மாநிலத்தவர்கள் செய்யும் தொழிலைக் கணக்கிட்டு அவர்கள் ஜவுளி தொழிலில் ஈடுபடுவதை அறிந்து அவர்களை நேரில் சென்று சந்திக்கலாம் என முடிவெடுத்தார்.
8ந் தேதி காலையில் ஜவுளி தொழில் புரிகிற மொத்த வியாபாரிகள், அதில் ஈடுபடும் தொழிலாளர்கள் என அவர்கள் ஒவ்வொருவரின் வீடு வீடாகச் சென்று தமிழகத்தில் தொழில்துறை எந்த அளவில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை விளக்கி அவர்களையும் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டிக்கொண்டார்.