பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13ஆயிரம் கோடி பண மோசடி செய்த நீரவ் மோடியும், பிரதமர் மோடியும் கூட்டாளிகள் என சிவசேனா கட்சியின் சாமனா பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது. அந்தக் கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே பிரதமர் மோடி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் வெளிவந்த சாமனா இதழின் தலையங்கத்தில், ‘நீரவ் மோடி கடந்த ஜனவரி மாதமே நாட்டைவிட்டு ஓடிவிட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், சில வாரங்களுக்கு முன்பு டேவோஸில் நடைபெற்ற உலக பொருளாதார மன்றத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் மோடியுடன் நீரவ் மோடியும் இருக்கிறார். நீரவ் மோடியும், பா.ஜ.க.வும் கூட்டாளிகள் மற்றும் பா.ஜ.க. சந்தித்த தேர்தல்களில் அதற்கான நிதிகளைத் திரட்டித் தந்த வேலைகளை நீரவ் மோடிதான் பார்த்தார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆங்கில ஊடகத்திற்கு சிவசேனா தலைவர் அளித்துள்ள பேட்டியில், ‘நீரவ் மோடி நேரடியாகவும் மறைமுகமாகவும் கடந்த நான்கு ஆண்டுகளில் பா.ஜ.க.வுக்கு ரூ.250 கோடி வரை செலவு செய்திருக்கிறார். விளம்பரங்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கும் பா.ஜ.க.வுக்கு தேர்தல் சமயங்களில் அந்தப் பணம் உதவியாக இருந்தது. பொருளாதாரத்தைக் காப்பதாகச் சொல்லும் மோடி இந்த ஆட்களை ஓடவிட்டு, ஏழை மக்களை வரி என்ற பெயரில் வஞ்சிக்கிறார்’ என கடுமையாக பேசியுள்ளார்.